தி.மு.க., 'வார் ரூம்' பணியில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள்
- நமது நிருபர் -
தி.மு.க.,வின், 'வார் ரூம்' எனும் கட்டளை மையத்தில், ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காவல் துறையின் மிக முக்கிய பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி திடீரென ஓரங்கட்டப்பட்டார்.
உடனடி முடிவு
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின் முதல்வர் ஆன பின், மிக முக்கிய பதவியில் அவர் அமர்த்தப்பட்டார். அதேபோல, யாரும் எதிர்பார்க்காத வகையில், மற்றொரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியும், மாநகர காவல் துறையை அலங்கரிக்கும் வகையில் பணியமர்த்தி கவுரவிக்கப்பட்டார்.
இவர்களை போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்ற பின், தி.மு.க.,வின் கட்டளை மையத்தில் ஐக்கியமாகி இருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, அவசர சூழல்களில் தாமதங்களை தவிர்த்து, உடனடியாக முடிவு எடுப்பது மிக அவசியம்.
அதுபோல, வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்களை திரட்டி, தாமதமின்றி பகுப்பாய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதும் முக்கியம். முக்கிய முடிவுகள் எடுப்பவர்கள், அதை உடனே நிறைவேற்றும் திறமை மிக்கவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் ஒரே நேர்கோட்டில் இணைந்து பணிபுரிவது அவசியம்.
உச்ச பதவி
இது போன்ற பணிகளில், ஏற்கனவே பயிற்சி பெற்ற, ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரிகளின் உதவியை, தி.மு.க.,வின் கட்டளை மையம் நாடி உள்ளது.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளும், அந்த மையத்தில் ஐக்கியமாகி உள்ளனர். அவர்களுடன் உச்ச பதவிகளில் இருந்து, தற்போது ஓய்வில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரியும் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்