Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'சிட்டிங்' எம்.பி., மாவட்டத்தில் தொகுதி கேட்காதீங்க...: கம்யூனிஸ்ட்டுகளிடம் தி.மு.க., 'கறார்'

'சிட்டிங்' எம்.பி., மாவட்டத்தில் தொகுதி கேட்காதீங்க...: கம்யூனிஸ்ட்டுகளிடம் தி.மு.க., 'கறார்'

மதுரை: 'தமிழகத்தில் 'சிட்டிங்' எம்.பி.,க்கள் உள்ள மாவட்டங்களில், சட்டசபை தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்பதை தவிர்க்க வேண்டும்' என தி.மு.க., கறார் காட்டுகிறது.
தி.மு.க., கூட்டணியில் காங்., கம்யூனிஸ்ட்டுகள், வி.சி., போன்ற முக்கிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு, தொகுதிகள் எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளன. மீதமுள்ள சிறிய கட்சிகளுடன் தி.மு.க., தொடர் பேச்சு நடத்துகிறது.

இத்தேர்தலில் '200 தொகுதிகள் நிச்சயம்; 200க்கு மேல் லட்சியம்' என்ற கோஷத்துடன் தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது.

அதேநேரம் கூட்டணிக் கட்சிகளும் அதிருப்தியடையாத எண்ணிக்கையில் தொகுதியை ஒதுக்க முயற்சிக்கிறது. தே.மு.தி.க., -ம.நீ.ம., போன்ற புதிய கட்சிகள் தி.மு.க.,வுடன் இத்தேர்தல் கூட்டணியில் சேர்ந்துள்ளதால் ஏதாவது ஒரு மாவட்டத்தில் இக்கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

அவ்வாறு ஒதுக்கினால், இதுவரை அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கனவில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் கூட்டணிக்காக தொகுதியை தியாகம் செய்ய வேண்டும். இதனால் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி மீது தேவையில்லாத அதிருப்தி உருவாகும்.

இதுகுறித்து பல மாவட்டங்களில் இருந்து தி.மு.க., தலைமைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் நடத்திய வேட்பாளர் நேர்காணலின்போதும் 'தி.மு.க., ஜெயிக்க வேண்டிய தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கி விடாதீங்க' என வலியுறுத்தியும் உள்ளனர்.
இதையடுத்து தான் சில முக்கிய முடிவுகளை தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களை கொண்டுள்ள மதுரை, திண்டுக்கல், இ.கம்யூ., எம்.பி.,க்களை கொண்டுள்ள திருப்பூர், நாகபட்டினம் மாவட்டங்களில் வரும் தேர்தலில் சட்டசபை தொகுதியை கேட்க வேண்டாம். வேறு மாவட்டங்களில் தொகுதியை பரிசீலியுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

தி.மு.க.,வினர் கூறியதாவது: மதுரையில் மேற்கு தொகுதியை பெற மார்க்சிஸ்ட் காய் நகர்த்தியது. ஆனால் அத்தொகுதியில் ரூ.800 கோடிக்கு மேலான நலத் திட்டங்களை மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி செயல்படுத்தியுள்ளார். இது, தி.மு.க., ஜெயிக்கும் தொகுதி. கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் என தி.மு.க.,வினர வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு எம்.பி., என்பது 6 சட்டசபை தொகுதிகளுக்கு சமம். அந்த வகையில் சட்டசபை தேர்தலிலும் அதே மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க.,, கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது பாதிக்கும். இதனால் இந்த முடிவை தி.மு.க., தலைமை கையில் எடுத்தள்ளது என்றனர்.

Advertisement