Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஸ்டாலினிடம் சொந்தமாக கார் இல்லை; விஜயிடம் கடனாளியாக ஆனந்த்

ஸ்டாலினிடம் சொந்தமாக கார் இல்லை; விஜயிடம் கடனாளியாக ஆனந்த்

முதல்வர் ஸ்டாலினுக்கு சொந்தமாக கார் இல்லை

முதல்வர் ஸ்டாலின், கொளத்துார் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்; வேட்பு மனுவுடன், சொத்து விபரங்களை தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தனக்கு 30.59 லட்சம்; மனைவி துர்காவுக்கு 5.33 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக, வருமான வரித்துறையில் தெரிவித்துள்ளார். தன்னிடம் தற்போது 10,000 ரூபாய்; மனைவி துர்காவிடம் 40,000 ரூபாய் ரொக்கம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முதல்வரிடம் நகைகள் இல்லை. அவரது மனைவியிடம் 720 கிராம் தங்க நகைகள் உள்ளன.
இருவர் பெயரிலும் கார், இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனங்களும் இல்லை. முதல்வர் பெயரில் 3.30 கோடி; மனைவி பெயரில் 1.32 கோடி என, மொத்தம் 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. விவசாய நிலம், குடியிருப்பு கட்டடம் என, முதல்வர் பெயரில் 2.96 கோடி; மனைவி பெயரில் 2.11 கோடி என, மொத்தம் 5.07 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளன. அசையும், அசையா சொத்துக்கள் என, முதல்வர் ஸ்டாலினுக்கு 9.69 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.
சென்னை மாநிலக் கல்லுாரியில், 1973ம் ஆண்டு, அரசியல் அறிவியல் துறையில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்ததாகவும், தனக்கும், தன் மனைவிக்கும் கடன்கள் இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு, கொளத்துார் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தன் பெயரில் 45 வழக்குகள் இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்; தற்போது, வழக்குகள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ரூ.643 கோடி சொத்து

சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., தலைவர் விஜய், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், தன் சொத்து விபரத்தை தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: த.வெ.க., தலைவர் விஜய், கடந்த ஆண்டு 184.53 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக, வருமான வரி கணக்கு சமர்ப்பித்துள்ளார். அவரிடம் 2 லட்சம் ரூபாய்; மனைவி சங்கீதாவிடம் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளன. மேலும், 80.54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ., கார்; 2 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ., கார்; 3.01 கோடி ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா கார்; 1.63 கோடி ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா கார்; 5.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி சுசூகி கார்; 67,400 ரூபாய் மதிப்பிலான டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., வாகனம் உள்ளன. அதேபோல், விஜயிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள்; 883 கிராம் தங்கம்; அவரது மனைவி சங்கீதாவிடம் 2 கிலோ வெள்ளி; 3 கிலோ தங்கம்; 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் உள்ளன.
மொத்தமாக விஜய் பெயரில் 404.58 கோடி; மனைவி சங்கீதா பெயரில் 15.51 கோடி என, மொத்தம் 420.09 கோடி ரூபாய் மதிப்பிற்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. இவை தவிர, விவசாய நிலம், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக கட்டடங்கள் என, விஜய் பெயரில் 220.15 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள்; மனைவி சங்கீதா பெயரில் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. மொத்தமாக அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு 642.74 கோடி ரூபாய். பல்வேறு அறக்கட்டளைகளில் விஜய் அறங்காவலராக உள்ளார். தன் மனைவி சங்கீதாவை இல்லத்தரசி என மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். லயோலா கல்லுாரியில், 1992ல் பி.எஸ்சி., படித்த விஜய், பாதியில் நின்று விட்டதாகவும், கடன் எதுவும் இல்லை என்றும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி


சீமானின் சொத்து கணக்கு குறித்து, அவரது வேட்பு மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: சீமான் கையிருப்பில் 50,000 ரூபாய் ரொக்கம், அவரது மனைவி கயல்விழியிடம் 35,000 ரூபாய் ரொக்கம் உள்ளன. சீமானிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹூண்டாய் கார், மனைவியிடம் 25 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கார்கள் உள்ளன. அத்துடன், 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் 150 கிராம் தங்க நகைகள், மனைவியிடம் 2.08 லட்சம் ரூபாய் மதிப்பில் 1,600 கிராம் தங்க நகைகள் உள்ளன. சீமானிடம் 39.81 லட்சம் ரூபாய்; மனைவியிடம் 2.57 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன.
சீமான் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், மனைவி பெயரில் 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மொத்தமாக சீமான் மற்றும் அவரது மனைவி பெயரில், 3 கோடியே 83 லட்சத்து 88,680 ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. மேலும், சீமானுக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் 5.11 லட்சம் ரூபாய் கடனும், அவரது மனைவி பெயரில் 18.39 லட்சம் ரூபாய் கடனும் உள்ளன; அத்துடன், 24 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயிடம் கடனாளியாக ஆனந்த்


த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், சென்னை தி.நகர் தொகுதியில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ளபடி, ஆனந்த் கையில் 1.50 லட்சம்; அவரது மனைவி கையில் 1.25 லட்சம் ரூபாய் உள்ளது. இருவரின் அசையும் சொத்து மதிப்பு 3.66 கோடி; அசையா சொத்து 3.81 கோடி என, மொத்தம் 7.47 கோடி ரூபாய் உள்ளது. அதேபோல், விஜயிடம் இருந்து வாங்கப்பட்ட கடன், 3 கோடி ரூபாயோடு, மொத்தம் 3.58 கோடி ரூபாய் கடன் உள்ளது. ஆனந்த் மீது, கரூர் சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் உள்ளது.

Advertisement