Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஜனநாயகன் படத்தை தடுக்க கூட்டு சூழ்ச்சி: விஜய் குற்றச்சாட்டு

ஜனநாயகன் படத்தை தடுக்க கூட்டு சூழ்ச்சி: விஜய் குற்றச்சாட்டு

திருச்சி: நீட் தேர்வு ரத்து, ரேசன் கடையில் உளுந்தம் பருப்பு கொடுப்பேன் என்று சொன்னீர்களே என்னாச்சு?அடுத்த பொய் வாக்குறுதிகளை தயாரித்துவிட்டார் ஸ்டாலின் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட, தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் விஜய் பேசியதாவது: திருச்சி பகுதி மக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.

காலையில் எல்லோரும் சாப்பிட்டீர்களா? காஸ் பிரச்னைகள் எல்லாம் எப்படி இருக்கிறது. எல்லாம் சரி ஆகிவிட்டதா? காஸ் சிலிண்டர் புக் செய்தால் ஆகிறதா? இந்த காஸ் பிரச்னையால் எவ்வளவு டீக்கடைகள், ஹோட்டல்கள் மூடிவிட்டார்கள். இதனால் எவ்வளவு கஷ்டங்கள், நஷ்டங்கள். காஸ் சிலிண்டர்கள் பிரச்னைக்கு இவர்கள் இரண்டு பேரும் தான் காரணம்.

டில்லிக்கு….

ஸ்டாலின் சார் இந்த பிரச்னைக்கும், நமக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்வார். ஆனால் அவர் வீட்டில் ஏதாவது பிரச்னை, ரெய்டு என்றால் டில்லிக்கு பறந்து போய் விட்டு வருவார். இந்த காஸ் சிலிண்டர் பிரச்னைக்கு கொஞ்சம் டில்லிக்கு பறந்து போய்விட்டு வரலாமலா? கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும். காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவேன் சொன்ன வாக்குறுதிகள் என்னாச்சு? நீட் தேர்வு ரத்து, ரேசன் கடையில் உளுந்தம் பருப்பு கொடுப்பேன் என்று சொன்னீர்களே என்னாச்சு? அடுத்த பொய் வாக்குறுதிகளை தயாரித்துவிட்டார் ஸ்டாலின்.
ஸ்டாலினைப் போல் நாங்கள் பொய் வாக்குறுதிகளை தர மாட்டோம். 6 சிலிண்டர் கட்டணம் இல்லாமல் தருவோம். கல்யாணம் ஆகிப்போற தங்கைகளுக்கு ஒரு பவுன் தங்கம், பட்டுச்சேலை தருவோம். தவெக சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் காடு பக்கம் ஒதுங்கிய பெண் இந்த உலகத்தை விட்டே போய்விட்டாங்க. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத இந்த தீய சக்தி திமுக அரசை என்ன பண்ணலாம், தூக்கி எறிவோமா? திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார்.

நியாயமான ஆட்சி

கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக வாங்கிட்டு தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து விட்டார். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை? இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்த ஸ்டாலின் சர்காரை தூக்கி வீசி எறிவோமா?
நகராட்சி துறையில் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால், மற்ற துறை கணக்கெல்லாம் போட்டுப் பாருங்க, தலையெல்லாம் சுற்றி விடும். 2,000 கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு வேலை என கூறி 5 பேருக்கு மட்டும் வேலை கொடுத்தனர்; நாங்கள் 100% நியாயமான ஆட்சியை தருவோம்; 100 சதவீதம் என்னை நம்பலாம்.

கரூர் நிகழ்ச்சி

எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். இந்த தேர்தலில் திமுக ஏலத்தில் எடுத்துள்ள கல்லாப்பெட்டி கூட்டணியுடன் சேர்ந்து, மற்றும் பலர் கூட்டணியுடன் கள்ள கூட்டணி போட்டுக்கொண்டு என்னை எப்படி என்னை எதிர்க்கிறார்கள் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சி என்று பலர் சொல்வது மாதிரி, நம்ம கடைசி படம் ஜனநாயகனுக்கு எதிராகவும் நடக்கிறது.

கூட்டு சூழ்ச்சி

என் மனசுக்கு நெருக்கமான உங்க எல்லோருடனும் எனக்கு இருக்கும் பூர்வ ஜென்ம பந்தத்தை இன்னமும் எங்கோ இறுக்கமாக மாற்றிடுமோ என்று சூழ்ச்சி செய்கின்றனர். எங்கே ஜனநாயகன் படம் இந்த தேர்தலில் நமக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்று அதைத்தடுக்க ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது. அதோட இன்னும் பலப்பட சூழ்ச்சிகள். உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துத்தான் நீதி வேண்டும். திமுகவையும், பாஜவையும் நம்பாதீர்கள், இந்த இரண்டு பேரும் ஒரே கூட்டணி தான். இவ்வாறு விஜய் பேசினார்.

பாட்டு பாடி...

திருச்சி பிரசாரத்தில், விசிலுக்கு அடி ஓட்டு , கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருது, அதை இறுக்கி பிடிச்சு வரலாறு எழுது என விஜய் பாட்டு பாடி ஓட்டு சேகரித்தார்.

போலீஸ் கால் முறிவு

விஜய் பிரசாரத்தின் போது, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவன் கார் ஏறியதில் பாதுகாப்புப் பணியில் இருந்த சதீஷ் என்ற போலீஸ் ஒருவரில் கால் மீது ஏறியது. அப்போது அந்த போலீஸ்காரர், தடுப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். விபத்தை தொடர்ந்து, தவெகவினர், அந்த போலீஸ்காரரை தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றிவிட்டனர்.இச்சம்பவம் நடந்த போது ஆதவ் அர்ஜூனா , விஜய் காரில் இருந்ததாக தெரிகிறது.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement