Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கன்னட, தெலுங்கு மக்களிடம் வரவேற்பு பெறாத த.வெ.க.,

கன்னட, தெலுங்கு மக்களிடம் வரவேற்பு பெறாத த.வெ.க.,

- நமது நிருபர் -
கன்னட, தெலுங்கு மக்கள் அதிகமுள்ள கிராமப்புறங்களை அதிகம் கொண்ட தளி, வேப்பனஹள்ளி தொகுதியில், த.வெ.க.,விற்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி தொகுதியை த.வெ.க., கைப்பற்றியுள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் முகுந்தன், 18,844 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் அசோக்குமாரை தோற்கடித்தார். ஊத்தங்கரையில், த.வெ.க., வேட்பாளர் இளையராஜா, 5,198 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வனை தோற்கடித்தார்.
பர்கூர் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் முரளிதரன், 66,999 ஓட்டுக்கள் பெற்றாலும், 4,241 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராஜனிடம் தோல்வியடைந்தார்.
ஓசூர் தொகுதியில், கிராமப்புற ஓட்டுகளை எண்ணும் வரை, த.வெ.க., வேட்பாளர் வேந்தர்கரசன், 3ம் இடத்தில் இருந்தவர், நகர் பகுதி ஓட்டுகளை எண்ணும் போது, அதிக ஓட்டு கிடைத்து, 2ம் இடத்தை பிடித்தார். தி.மு.க., மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது.
தளி, வேப்பனஹள்ளி தொகுதிகள், அதிகளவில் கிராமப்புற ஓட்டுகளை கொண்டுள்ளது. இங்கு அதிகமுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் மத்தியில், த.வெ.க., தலைவர் விஜய்க்கு வரவேற்பு குறைவாக இருந்தது.
தெலுங்கு, கன்னட மொழி படங்களை பார்க்க அதிக ஆர்வம் காட்டும் இப்பகுதி மக்களிடையே, விஜய்க்கான வரவேற்பு குறைவாக இருந்துள்ளது. அதனால் தான், இத்தொகுதிகளில், த.வெ.க., வேட்பாளர்களுக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. ஓசூர் தொகுதியிலும், கிராமப்புறங்களில், த.வெ.க.,விற்கு ஓட்டு வங்கி குறைவாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குமரியில் ஆர்ப்பரிக்காத விசில் அலை


கன்னியாகுமரி தொகுதியில், த.வெ.க., இரண்டு, மூன்றாம் இடங்களையே பெற்றுள்ளது.
காங்கிரஸ் கோட்டையாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், 1977ல் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய அலையில் பெரிய தாக்கம் இல்லை. 1977, 80, 84 தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. கடந்த, 1989-ல் தி.மு.க., மாநிலம் முழுதும் அதிக வெற்றியை பெற்ற போதும், கன்னியாகுமரியில் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, நான்கு தொகுதிகளை கைப்பற்றியது.
அதேபோல, 1991ல் ராஜீவ் படுகொலையை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க., அபரிதமான வெற்றி பெற்ற போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இரண்டு தொகுதிகளை மட்டுமே பெற்றது.
கடந்த 2001ல் மட்டும் அ.தி.மு.க., இங்கு மூன்று தொகுதிகளை வென்றது. இப்படி மாநிலம் முழுதும் எந்த அலை அடித்தாலும், கன்னியாகுமரியில் அதன் பாதிப்பில்லை என்பது இந்த தேர்தலிலும் நிரூபணமாகியுள்ளது. மாநிலம் முழுதும் விசில் சத்தம் பலமாக கேட்டும், கன்னியாகுமரியில் ஒரு தொகுதியில் கூட த.வெ.க., வெற்றி பெறவில்லை.

Advertisement