Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மூன்று காஸ் சிலிண்டர் இலவசம்: அடிச்சுவிட்ட பழனிசாமி

மூன்று காஸ் சிலிண்டர் இலவசம்: அடிச்சுவிட்ட பழனிசாமி

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பிரிஜ், பருப்பு, பாமாயில் இலவசம் உள்ளிட்ட 297 வாக்குறுதிகளை, அ.தி.மு.க., அறிவித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
* மதச்சார்பின்மை, மனிதநேயம், எளியோர் மேம்பாடு சமூக நீதி, சமத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளில் சமரசம் கிடையாது
* அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் 2,000 ரூபாய்
* முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் 1,200 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக உயர்வு
* வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி
* ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய். காயமடையும் வீரர்களுக்கு 2 லட்சம் ரூபாய். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 5 லட்சம் ரூபாய். ஜல்லிக்கட்டு நடத்த ஆன்லைன் பதிவு முறை ரத்து
* சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் துவங்க வட்டியில்லா கடன்
* அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர் இலவசம்
* மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி
* வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், பிளஸ் 2 படித்தவர்களுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை
* மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 8,000 ரூபாயிலிருந்து, 12,000 ரூபாயாக உயர்த்தப்படும்
* பொங்கல் தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்படும்
* கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் மின்சாரம்
* நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி
* தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு தரமான சேலை, ஆண்களுக்கு தரமான வேட்டி வழங்கப்படும்
* ரேஷனில் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்
* இந்தியா வலுவான வல்லரசாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாநில அரசுகள் அதற்கான நிதி, நிர்வாக உரிமைகளுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப மாநில அரசுகளுக்கு உரிய நிதிப் பகிர்வை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் கொள்கை
* புதிய ஆட்டோ வாங்க, 75,000 ரூபாய் மானியம்
* வளர்ச்சி அடைந்த தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நிதிப் பகிர்வை, தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்
* தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு இப்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைந்து விடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்
* கல்வி, மருத்துவம் போன்ற துறைகள், மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்
* மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் செஸ், சர்சார்ஜ் சேர்க்கப்பட, மத்திய அரசை வலியுறுத்துவோம்
* ஜாதி, பிறப்பு, இறப்பு, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியப் பலன்களைப் பெற, பொது சேவை மையம் போன்ற கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்
* பொது மக்கள் அளிக்கும் மனுக்களின் நிலை அறிய இணையதளம் மேம்படுத்தப்படும்
* கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊழல் செய்த அரசு அலுவலர்கள், மத்திய அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னரிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்
* கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் மலைவாழ் மக்களுக்கு, எம்.ஜி.ஆர்., பட்டா என்ற பெயரில் பட்டா வழங்கப்படும்
* கரூர் போன்ற சில மாவட்டங்களில், கோவில் இனாம் நில உரிமை பிரச்னைக்கு தீர்வு காண குழு
* கரும்புக்கு கொள்முதல் விலை டன்னுக்கு 4,500 ரூபாய்
* விவசாய உற்பத்தி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு
* குறு, சிறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் மானியம்
* துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி
* அனைத்து உணவு தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள், கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும்
* வேளாண் வணிகப் பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதம் தவிர, மீதமுள்ள பிரீமியத் தொகையை அரசே செலுத்தும்
* வேளாண் விளை பொருட்களை பாதுகாக்க தேவையான இடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்
* கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, விவசாயிகளுக்கு ட்ரோன் கிடைக்க நடவடிக்கை
* நெல்லுக்கு கொள்முதல் விலை குவின்டாலுக்கு 3,500 ரூபாய்
* தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
* இயற்கை விவசாயிகளுக்கு சலுகை
* இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கும் விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு
* சிறு, குறு விவசாயிகளுக்கு, அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தார் பாய்
* விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் உரிய அனுமதியுடன் வண்டல் மண் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும்
* 100 சதவீத மானியத்தில் சூரிய ஒளி பம்ப் செட்டுகள்
* தமிழகம் முழுதும் ஏரிகள், ஊரணிகள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக சீரமைக்கப்படும்
* 65 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு, மீனவர் நல வாரியம் வாயிலாக மாதம் 2,500 ரூபாய் ஓய்வூதியம்
* அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு, 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்
* இலவச கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்
* 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஐந்து பாடங்களுடன், கணினி அறிவியல் பாடமும் சேர்க்கப்படும்
* புதிய தேசிய கல்விக் கொள்கையில், இருமொழி கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை ஏற்க மாட்டோம்
* மீண்டும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்படும்.
* மீண்டும் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படும். அத்துடன் இலவச பட்டு வேட்டி, சட்டை, பட்டு சேலைகள் வழங்கப்படும்
* ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைகளுடன் இணைந்து, தமிழகத்தில் 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைகள் துவங்கப்படும்
* அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் வசிப்போருக்கு பொது பயன்பாட்டு கட்டணம் சீரமைக்கப்படும்
* வீடுகளுக்கு, மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, 'சோலார் பேனல்' அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு 30,000 ரூபாய், இரண்டு கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்
* இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் வழங்கப்படும்
* தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்
* தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
* தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு சீர்கேடு இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். கஞ்சா, போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க, முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும். போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். பாலியல் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, கூலிப் படைகள் இரும்புக் கரம் கொண்டு முற்றிலும் ஒழிக்கப்படும்
* மாநில அளவில் மட்டுமின்றி, தாலுகா அளவிலான உள்ளூர் பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள், பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும்
* உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, 10 லட்சம் ரூபாய் வரை முழுமையான வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்கப்படும்
* பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில், வருமான உச்சவரம்பு நீக்கப்படும்
* தமிழகத்தின் முக்கிய நகரங்களில், பத்திரிகையாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு குடியிருப்பு மனைகள் வழங்கப்படும்
* காட்சி ஊடகவியலாளர்களுக்கும் ஓய்வூதியம்
* அவினாசி - அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாவது பகுதி செயல்படுத்தப்படும்
* பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
* காவிரி -- வைகை -- குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் விரைவில் முடிக்கப்படும்
* கோதாவரி -- காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
* மீனவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
* மீனவர்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 500 லிட்டராக அதிகரிக்கப்படும்
* இருசக்கர வாகனங்கள் வாங்க, 5 லட்சம் பெண்களுக்கு தலா 25,000 ரூபாய் மானியம்
* மீண்டும் கல்வி தொலைக்காட்சி துவங்கப்படும்
* இரண்டாம் கட்ட நகரங்களிலும் உலகத் தரத்தில் 'சிசிடிவி' கட்டமைப்புகள்
* அம்மா இல்லம் திட்டம் வாயிலாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்
* 100 நாட்கள் வேலை திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்படும்
* தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்
* கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்
* மீண்டும் நடந்தாய் வாழி காவிரி திட்டம், அம்மா உப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
* ஐந்து ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்படும்
* சாக்கடை கழிவுகளை அகற்ற, 'ரோபோட்டிக்' தொழில்நுட்பம்
* சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் அமைக்கப்படும்
* முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் மானியம்.

Advertisement

ஏப் 14, 2026 10:11 am

குவார்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவாங்க பத்திரப்பதிவு கட்டணம் லைசென்ஸ் கட்டணம் சினிமா கட்டணம் தொழில் வரி உயர்த்துவாங்க

Reply Rate this