Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அக்னி பரீட்சைக்கு தயாராகும் த.மா.கா., வேட்பாளர்கள்

 அக்னி பரீட்சைக்கு தயாராகும் த.மா.கா., வேட்பாளர்கள்

- நமது நிருபர் -

அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளும் தி.மு.க.,வுக்கு சாதகமானவை என்பதால், அக்னி பரீட்சைக்கு தயாராக வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் வாங்கிய ஆறு தொகுதிகளிலும் த.மா.கா., தோல்வியை தழுவியது.

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., வெளியேறினாலும், பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., நீடித்து, லோக்சபா தேர்தலில் மூன்று இடங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றது.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, காங்கேயம், ஈரோடு கிழக்கு உட்பட 12 தொகுதிகளை த.மா.கா., கேட்டது. ஆனால், ஐந்து தொகுதிகள் தான் தருவோம் என அ.தி.மு.க., கூறியது. மண்டலத்திற்கு தலா இரண்டு என்ற அடிப்படையில், எட்டு தொகுதிகளை தரும்படி த.மா.கா., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் பரிசீலிக்கலாம்' என பழனிசாமி கூற, த.மா.கா., தரப்பில் சைக்கிள் சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனிடம் வழக்கறிஞர் ஸ்ரீதென்னவன் வாயிலாக மனு தாக்கல் செய்யப்பட்டது .

பின், சென்னை நட்சத்திர ஹோட்டலில், அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு நடத்தியபோது, ஆறு தொகுதியாவது தாருங்கள் என த.மா.கா., இறங்கி வந்தது. ஆனால், நான்கு தொகுதிகள் தான் என பழனிசாமி உறுதியாக நிற்க, அதிருப்தியுடன் வாசன் வெளியேறினார்.

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், வாசனை சமரசம் செய்து, ஐந்து தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வைத்தார். தேர்தல் செலவை பா.ஜ., மேலிடம் ஏற்றுக் கொள்வதாக கூறியதால், தாமரை சின்னத்தில் போட்டியிட வாசன் சம்மதித்துள்ளார்.

ஆனால், அ.தி.மு.க., தரப்பில் அமைச்சர்கள் போட்டியிடும் மூன்று தொகுதிகளும், தி.மு.க., கூட்டணிக்கு செல்வாக்கு அதிகமாக உள்ள தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், த.மா.கா., வேட்பாளர்கள் அக்னி பரீட்சைக்கு தயாராகின்றனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா., நிர்வாகிகள் பலர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தாமரை சின்னத்திற்கு எதிர்ப்பு; த.மா.கா., நிர்வாகிகள் ராஜினாமா


இதற்கிடையில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் த.மா.கா., போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா., நிர்வாகிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக கூறுகையில், 'த.மா.கா., வளர்ச்சியில் வாசனுக்கு ஆர்வமில்லை. கூட்டணி தொடர்பாக வாசன் எடுத்த முடிவு எல்லாமே தவறாக உள்ளது. பெரிய கட்சியான அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல், தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? கடந்த 2016ல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் சொன்னதால், கூட்டணியில் இருந்து விலகியவர் வாசன். வரும் சட்டசபை தேர்தலில் வாசனுடன் சேர்ந்து, நாங்களும் பலிகடா ஆக முடியாது' என்றனர்.

Advertisement