Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஏப்.21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரத்திற்கு தடை; மீறினால் 2 ஆண்டுகள் சிறை என தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஏப்.21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரத்திற்கு தடை; மீறினால் 2 ஆண்டுகள் சிறை என தேர்தல் கமிஷன் அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ஏப்.21ம் தேதி மாலை 6 மணி முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமல்லாது எந்த விதத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது, விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஏப்.23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஏப் 21ம் தேதி மாலை 6 மணி முதல் அமலாக்கப்படும் தேர்தல் விதிமுறைகள் என்னென்ன என்பதை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;
2026ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்23 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறும். ஏப்.21ம் தேதி மாலை 6 மணி முதல் ஓட்டுப்பதிவு முடியும் வரை 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126ன்படி பின்வரும் விதிமுறைகள் அமலில் இருக்கும்.
1. தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ ஊர்லத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
2. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
3. பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
.4. தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப். 21 மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
5. கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
6 வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், ஏப்.21 அன்று மாலை 6.00 மணி முதல் செயல் திறனற்றதாகிவிடும்.
7. சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு…
i. அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
ii. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும்
iii. தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
iv. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்
8. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
9. இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement