Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


காங்., குழுவில் த.வெ.க., உறுப்பினர்; இது சத்தியமூர்த்தி பவன் கூத்து!

காங்., குழுவில் த.வெ.க., உறுப்பினர்; இது சத்தியமூர்த்தி பவன் கூத்து!

சமீபத்தில், திருநெல்வேலியில் நடந்த த.வெ.க., தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசுகையில், 'காங்., கட்சியை, தி.மு.க., சில கோடிகளுக்கு வாங்கிவிட்டது. ஆனால், உண்மையான காங்., நம் பக்கம் இருக்கிறது. காங்., - தி.மு.க., கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி' என்றார். அவரது பேச்சு காங்., கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

'விஜய் கூறியது தவறு. காங்., கட்சியினர் யாரும் விஜய் கட்சிக்கு செல்லவில்லை' என, காங்., தலைவர்கள் பேட்டி அளித்தனர். மேலும், காங்கிரஸ் ஓட்டுகள், த.வெ.க., பக்கம் செல்வதை தடுக்கவும், கட்சியினரை உற்சாகப்படுத்தவும், 234 தொகுதிகளுக்கும், தலா ஆறு பேரை தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்க, தமிழக காங்., கட்சி முடிவு செய்தது.

மாநில நிர்வாகிகள் ராம்மோகன், அசோகன், வாசு, உள்ளிட்டோர், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணி உறுப்பினர்கள் பட்டியலை தயாரித்தனர். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலுடன், அப்பட்டியல் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த அரைமணி நேரத்தில், அந்த பட்டியல் நீக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக காங்., நிர்வாகிகள் கூறியதாவது: மாநில நிர்வாகிகள் சிலர், தங்களின் ஆதரவாளர்கள் பெயரை சேர்த்து பட்டியலை தயாரித்தனர். அப்பட்டியலில் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பொன்வண்டு ரவியை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு உறுப்பினராக நியமித்திருந்தனர்.

டி.செல்வம் த.வெ.க.,விற்கு சென்றபோது, அவருடன் பொன்வண்டு ரவியும் அக்கட்சியில் சேர்ந்து விட்டார். இது, கடும் அதிர்ச்சியை அளித்தது.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் கராத்தே செல்வத்திடம் கலந்தாலோசிக்காமல் உறுப்பினர்களை நியமித்ததால், அவர் சத்தியமூர்த்தி பவன் வந்து எதிர்ப்பு தெரிவித்தார். மாநில நிர்வாகி அருள்பெத்தையா சமாதானப்படுத்தி அனுப்பினார்.

வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு, கட்சி வேலையே செய்யாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் அலுவலக ஊழியராக உள்ள ஒருவர், தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் பெயரை பரிந்துரைத்தார். இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியதும், அந்த பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர்கள் ஒப்புதலுடன் புதிய பட்டியல் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement