Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஹிந்தி, பெங்காலி மொழியில் வாக்காளர் பெயர்கள்: ஓட்டுப்பதிவில் சிக்கல் ஏற்படும் என குற்றச்சாட்டு

ஹிந்தி, பெங்காலி மொழியில் வாக்காளர் பெயர்கள்: ஓட்டுப்பதிவில் சிக்கல் ஏற்படும் என குற்றச்சாட்டு

அடையாறு: வேளச்சேரி தொகுதி யில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயர்கள், ஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் இருப்பதால், ஓட்டு பதிவின் போது சிக்கல் ஏற்படும் என, அலுவலர்கள், கட்சி முகவர்கள் குற்றச் சாட்டு தெரிவித்து உள்ளனர்.
வேளச்சேரி சட்டசபை தொகுதியில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து, அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நேற்று அடையாறு மண்டல அலுவலகத்தில் நடந்தது.

அதில், கட்சியினர் பேசியதாவது: பிரசாரம், பொதுக் கூட்டம் அனுமதியை எளிமையாக்க வேண்டும். ஆண் வாக்காளர் அடையாள அட்டையில் பெண் புகைப்படம் இருப்பதால், அவர்கள் ஓட்டு போடுவதில் சிக்கல் உள்ளது.

வாக்காளர் இறுதி பட்டியலில், சிலரின் பெயர் ஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் உள்ளது. ஓட்டுப்பதிவின் போது, முகவர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மொழி தெரியாமல் திணறுவர். ஆவணங்கள் சரிபார்ப்பு பணியில் சிக்கல் ஏற்படும். கட்சிகளுக்குள் தேவையில்லாத பிரச்னை, வாக்காளர்கள் ஓட்டு போட முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பதில் கூறியதாவது: பிரசாரம், பொதுக் கூட்டம் அனுமதியை, 'சுவிதா' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மண்டல அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை காவலர்கள் இருப்பர். அவர்கள், எளிதாக போலீஸ் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குவர்.

வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாறி இருந்தால், வரும் 25ம் தேதிக்குள், உரிய படிவத்தை விண்ணப்பித்து, தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று, ஓட்டுப் பதிவு செய்வதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆதார் அட்டையில் இருந்த தகவல்களை அப்படியே பதிவேற்றம் செய்த தால், இறுதி வாக்காளர் பட்டியலில், சிலரின் பெயர்கள் ஹிந்தி, பெங்காலி, ஒடியா மொழிகளில் உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு முன், அந்த பெயர்களை தமிழ் மொழியில் சேர்த்து, வாக்காளர் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement