Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்': கோவில் நகர தொகுதிகளை கேட்டு பா.ஜ., அடம்

'போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்': கோவில் நகர தொகுதிகளை கேட்டு பா.ஜ., அடம்

சென்னை: அவினாசி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருப்பரங்குன்றம் உட்பட, கோவில் நகரங்கள் உள்ள தொகுதிகளை, பா.ஜ., கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு, 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ல் அ.தி.மு.க., கூட்டணியில், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, நெல்லை, காரைக்குடி, விருதுநகர், மதுரை வடக்கு, அரவக்குறிச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலுார், திட்டக்குடி, கோவை தெற்கு, தாராபுரம், மொடக்குறிச்சி, ஊட்டி, திருவையாறு, தளி, சென்னை துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய 20 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது.

நாகர்கோவில், நெல்லை, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய நான்கில் மட்டும் வென்றது. இதில், கோவை தெற்கிற்கு பதிலாக, கோவை வடக்கு தொகுதியை, அ.தி.மு.க., போட்டியிட வசதியாக ஒதுக்கிக் கொண்டு விட்டதாக, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

தங்களுக்கான தொகுதிகளில், தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் கோவில் நகரங்களை, பா.ஜ., கேட்பதாகவும், இது எதிர்காலத்தில் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில், 'திருத்தணி, திருவண்ணாமலை, அவினாசி, பழனி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருப்பரங்குன்றம், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை, கட்டாயம் தங்களுக்கு அ.தி.மு.க., தலைமை ஒதுக்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. இதை எதிர்த்து பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனால் இத்தொகுதியை பா.ஜ., கேட்கிறது.
மத்திய இணை அமைச்சர் முருகன், அவினாசி தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். அவினாசி கோவில் பிரச்னைக்காக, ஹிந்து முன்னணி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அத்தொகுதியை பா.ஜ., குறி வைத்துள்ளது.

கடந்த 2021ல் கடலுார் மாவட்டம், திட்டக்குடி தனி தொகுதியில், பா.ஜ., போட்டியிட்டது. இந்த முறை அந்த மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியை, பா.ஜ., கேட்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை நீண்ட காலமாக தொடரும் நிலையில், அங்கு போட்டியிட பா.ஜ., விரும்புவதாக, அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இப்படி கேட்கப்படும் தொகுதிகளில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு பிரதான கோவில் சம்பந்தமான பிரச்னைகளையும், பா.ஜ., கையில் எடுத்து போராடி வரும் நிலையில், தேர்தலில் அது தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அக்கட்சியினர் தீர்க்கமாக நம்புகின்றனர்.

Advertisement