த.வெ.க., அரசுக்கு அளிக்கும் ஆதரவை மறு பரிசீலனை செய்வோம்: மா.கம்யூ.,
திருவாரூர்: ''அ.தி.மு.க., ஆதரவை, தமிழக வெற்றி கழக அரசு பெற்றால், எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், நேற்று அவர் அளித்த பேட்டி: தற்போது நடப்பதை பார்த்தால், தினமும் பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. கள்ள சந்தையில், 5000 ரூபாய் வரை காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மூடிக்கிடக்கின்றன. விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில், இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு, நாங்கள் ஆதரவு அளித்து இருப்பது மீண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்கக்கூடாது என்பதற்காகத்தான். கொல்லைப்புற வழியாக, பா.ஜ.,வின் கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால், வெளியில் இருந்து ஆதரவளித்தோம்.
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு எதிராக தான், த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர். அத்தகைய கட்சிகளின் ஆதரவை பெற்று, ஆட்சி அமைப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. த.வெ.க., அமைச்சரவையில், அ.தி.மு.க.,வை சேர்த்து கொள்வது என்பது, மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.
அந்த நிலைக்கு, த.வெ.க., செல்லாது என, நம்புகிறோம். அ.தி.மு.க., ஆதரவை அவர்கள் பெற்றால், எங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய நேரிடும். அ.தி.மு.க.,வில், உட்கட்சி பிரச்னை புதிது அல்ல. இதை, அக்கட்சியினர் சரி செய்து கொள்வர்.
தமிழகத்தில், 707 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதை வரவேற்கிறோம். ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள கடைகளையும் மூடவேண்டும். மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்