உதயநிதியை பாதுகாப்பதில் அமைச்சர் ஆதவுக்கு அவசரம் ஏன்?: அண்ணாமலை
சென்னை: 'எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை பாதுகாப்பதில், தி.மு.க., தொண்டர்களுக்கு கூட இல்லாத அவசரத்தை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டியுள்ளார்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, 'வட மாநிலங்களில் சனாதனம் என்றால் ஹிந்து, தமிழகத்தில் சனாதனம் என்றால் சமத்துவமின்மை' என, கூறினார்.
அதை கண்டித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: 'ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து' என்ற பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவையை, ஆதவ் அர்ஜுனா நினைவூட்டியுள்ளார்.
தற்போது, எந்த கட்சியில் இருக்கிறோம் என்பதையே, ஆதவ் அர்ஜுனா மறந்து விட்டாரோ என, தோன்றுகிறது. உதயநிதியை பாதுகாப்பதில், தி.மு.க., தொண்டர்களுக்கு கூட இல்லாத அவசரத்தை, ஆதவ் காட்டியுள்ளார்.
வட மாநிலங்களில், ஹிந்து மதத்துக்கு இணையாக பார்க்கப்படும், சனாதன தர்மம் என்பது தமிழகத்திற்கு வந்ததும், எப்படி சமத்துவமின்மை என பொருள் மாற்றப்படுகிறது? சனாதனம் பற்றி, தமிழக வெற்றிக் கழக - எம்.எல்.ஏ., கூறிய பொறுப்பற்ற கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதில், அதை நியாயப்படுத்தி பேசும் பாதையை ஆதவ் தேர்வு செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற தன் பேச்சுக்கு உதயநிதி தெரிவித்த விளக்கத்துக்கு, கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, 'இந்த புளிச்சு போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீர்கள்? 'சனாதன தர்மம், ஹிந்து மதம் இரண்டும் வெவ்வேறு அல்ல' என, உங்கள் ஓனர், தி.க., வீரமணி சொல்கிறார்.
'அவர் தானே, உங்கள் குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்; தேர்தல் பிரசாரத்தின்போது, 'சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்' என பேசியிருக்கலாமே; கூடவே, உங்கள் குருநாதரையும் கூட்டி போயிருக்கலாமே; நீங்கள் தான், 'தில்'லான ஆள் ஆச்சே; பிரசார வண்டியில இடம் இல்லையா' என கேள்வி எழுப்பி உள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்