பெரம்பூரில் விஜயை எதிர்த்து களமிறங்கும் சேகர்பாபு, திவ்யா?
- நமது நிருபர் -
சென்னை, பெரம்பூரில் த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட்டால், அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் அமைச்சர் சேகர்பாபு அல்லது நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், 234 தொகுதிகளில் த.வெ.க., உறுப்பினர்கள் சேர்க்கை அதிகமாக நடந்த தொகுதியாகவும், கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் தொகுதியாகவும், பெரம்பூர் உள்ளது. அத்தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி உறுதி என, அக்கட்சி நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
பெரம்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த ஆர்.டி.சேகர் இருக்கிறார்; கட்சியின் மாவட்ட செயலராகவும் உள்ளார். விஜயை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர், வலிமையான வேட்பாளராக இருக்க வேண்டும் என, கட்சி தலைமை கருதுகிறது.
பெரம்பூரில் விஜய் போட்டியிடும்பட்சத்தில், அவரை எதிர்த்து சேகர்பாபுவை நிறுத்தினால் கடும் நெருக்கடி தர முடியும்; விஜயின் வெற்றி வாய்ப்பை பறிக்க முடியும் என, தி.மு.க., தலைமை கருதுகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்துள்ள, நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். சேகர்பாபு இல்லாதபட்சத்தில், விஜய்க்கு எதிராக பெரம்பூரில் திவ்யாவை களமிறக்கலாமா என்ற யோசனையும் தி.மு.க., தலைமையிடம் உள்ளது.
இவர்கள் இருவரை தவிர, இளைஞரணி மாநில நிர்வாகியும், உதயநிதி ஆதரவாளருமான துாத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோயல், கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பெயர்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்