மாஜிக்கு கிடைக்குமா ஓசூர் தொகுதி?
ஓசூர் தொகுதியை, கூட்டணி கட்சிக்கு தள்ள முயற்சி நடப்பதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சரானவர் பாலகிருஷ்ணா ரெட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவிடம் நல்ல செல்வாக்குடன் இருந்தார். தற்போது, அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக உள்ள முனுசாமிக்கு அடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் பதவி வகித்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி மட்டும் தான். அந்த காலகட்டத்தில், முனுசாமி செல்வாக்கு குறைந்தது.
இந்நிலையில், பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறை தண்டனை விதிப்பால், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி இழந்தார். பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கிலிருந்து பாலகிருஷ்ணா ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார். அதனால், இந்த தேர்தலில் மீண்டும் ஓசூர் தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அவருக்கும், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமிக்கும் நல்ல உறவு துவக்கத்தில் இருந்தே இல்லை.
இதுகுறித்து, பாலகிருஷ்ணா ரெட்டியின் ஆதரவாளர்கள் மேலும் கூறியதாவது:
கடந்த 2016ல் பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சரான பின், தன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்களுக்கு கட்சியிலும் கூட்டுறவுத் துறைகளிலும் பதவிகளை பெற்று கொடுத்தார். அப்போது, முனுசாமி ஆதரவாளர்களுக்கு பதவி கிடைக்கவில்லை.
அப்போது துவங்கி, முனுசாமிக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கும் இடையேயான உரசல் ஏற்பட்டது. தற்போது, கட்சியில் முனுசாமி துணை பொதுச்செயலராக உள்ளதால், அவரது கை ஓங்கியுள்ளது. அதனால் வரும் தேர்தலில், ஓசூர் தொகுதியை அ.தி.மு.க.,விற்கு ஒதுக்காமல், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிட முடியாத சூழல் உருவாகும்.
அதோடு தளி தொகுதியை, அ.தி.மு.க.,விற்கு வாங்கி, அங்கு தனக்கு வேண்டிய வேட்பாளரை நிறுத்த முனுசாமி முயற்சி செய்வதாகவும் தெரிகிறது. ஓசூர் அளவிற்கு தளி தொகுதியில், அ.தி.மு.க.,விற்கு பலம் இல்லை. அத்தொகுதியில் பாலகிருஷ்ணா ரெட்டி களம் இறங்க வாய்ப்பு குறைவு. இதை மனதில் வைத்தே, ஓசூர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்