Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 முதல்வர் விஜய் உள்ளிட்ட 233 எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு

 முதல்வர் விஜய் உள்ளிட்ட 233 எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பு

சென்னை: முதல்வர் விஜய் உள்ளிட்ட, 233 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108, தி.மு.க., 59, அ.தி.மு.க., 47 , காங்கிரஸ் 5, பா.ம.க., 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. வி.சி.க., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா, 2 இடங்களிலும், தே.மு.தி.க., - பா.ஜ., - அ.ம.மு.க., தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன், த.வெ.க., ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

தெளிவுரை இதைத்தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் எம்.எல்.ஏ., கருப்பையா பொறுப் பேற்றார். அவரது தலைமையில், நேற்று காலை 9:30 மணிக்கு சட்டசபை கூடியது.

த.வெ.க., சார்பில் வெற்றி பெற்றுள்ள பல எம்.எல்.ஏ.,க்கள், காலை 7:40 மணி முதல் சட்டசபைக்கு வர துவங்கினர். காலை 9:14 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேரு, கொறடா எ.வ.வேலு உள்ளிட்டோர் சபைக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் விஜய், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிசாமி ஆகியோர் சபையில் வந்து அமர்ந்தனர்.

திருக்குறள் வாசித்து, அதற்கு தெளிவுரை வழங்கி, தற்காலிக சபாநாயகர் சபையை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளதாக, தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.

உறுதிமொழி காலை, 9:32 மணிக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சபைக்கு வந்து அமர்ந்தார். ஒவ்வொருவர் பெயராக கூறி பதவி ஏற்க, சட்டசபை செயலர் சீனிவாசன் அழைத்தார். முதலில், முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றார்.

அவரை தொடர்ந்து, எட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்றனர். சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் கீர்த்தனா, வெற்றி சான்றிதழை எடுத்து வராததால், திருப்பி அனுப்பப்பட்டார்.

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிசாமி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 232 எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்றனர். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், அந்த இடம் காலியாகியுள்ளது.

பெயர் அழைக்கப்பட்டு சான்றிதழ் எடுத்து வராமல் திருப்பி அனுப்பப்பட்ட அமைச்சர் கீர்த்தனா, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கருப்பணன் உள்ளிட்ட, 13 பேர், இறுதியில் வெற்றி சான்றிதழை எடுத்து வந்து கொடுத்து பதவி ஏற்றனர்.

மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், வெற்றிச் சான்றிதழை எடுத்து வரவில்லை. இதனால், அவர் பதவி ஏற்க, சட்டசபை செயலர் சீனிவாசன் அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் தற்காலிக சபாநாயகர் அறையில் பதவியேற்றார்.

Advertisement