நம்பிக்கை ஓட்டெடுப்பில் 'ஆப்சென்ட்'டா, ஆதரவா? அணி மாறும் திட்டத்தில் உள்ளதா ம.தி.மு.க.,
மதுரை: தமிழக சட்டசபையில் த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இதன்மூலம் த.வெ.க.,வுக்கு அக்கட்சி மறைமுக ஆதரவை அளித்து, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து தாவ உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அரசை அமைக்க த.வெ.க.,வுக்கு, காங்., ஆதரவு அளித்த நிலையில், தி.மு.க., கூட்டணியில் கம்யூ., வி.சி., கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மே 13ல் ஆட்சிக்கு தேவையான பெருபான்மையை சட்டசபையில் நிரூபிக்க கவர்னர் அர்லேக்கர் உத்தரவிட்டார். இதனால் நேற்று முன்தினம் நடந்த த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் 144 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பெற்று விஜய் அரசு வெற்றி பெற்றது.
இதில் தி.மு.க., கூட்டணியில் உள்ள, தே.மு.தி.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொ.ம.தே.க., ம.ம.க., ம.ஜ.த., உட்பட 58 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட, ம.தி.மு.க.,வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வரவில்லை. அவர்கள் அக்கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றதால் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை என 'பொருத்தமில்லாத காரணத்தை' பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். அரசு நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பு, எம்.எல்.ஏ.,க்களை பொறுத்தவரை முக்கியமானது. கட்சியின் கூட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நடத்த முடியும். இந்த விஷயம் பழுத்த அரசியல்வாதியான வைகோவுக்கு தெரியாதா?
ஓட்டெடுப்புக்கு முதல் நாள் மரியாதை நிமித்தமாக வைகோவை அவரது வீட்டிற்கு சென்று விஜய் சந்தித்தபோது, ம.தி.மு.க.,வின் ஆதரவை கேட்டிருந்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தி.மு.க.,விற்கு அதிர்ச்சியையும், அரசியலில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் ம.தி.மு.க., 2 இடங்களை பெற்றது. கூட்டணியில் உள்ள கம்யூ.,கள், வி.சி., முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் அனுமதி பெற்று, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்துள்ளன. ஆனால் எங்கள் சின்னத்தில் போட்டியிட்ட பிற கட்சியினர் எல்லாம் வெளிநடப்பு செய்தனர். ம.தி.மு.க., மட்டும் ஆப்சென்ட் ஆகியுள்ளது.
முதல்நாள் விஜய் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சியுடன் வைகோ வரவேற்பு அளித்தார். அவரது வீட்டில் உள்ள சிறியவர் முதல் அனைவரையும் ஆர்வத்துடன் விஜய்க்கு அறிமுகம் செய்தார். வெளியே கார் வரை சென்று வழி அனுப்பினார். அதோடு மறுநாள் நடந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து தி.மு.க., தலைமையிடம் அவர் முன்கூட்டியே விளக்கியுள்ளாரா என்ற தகவலும் வெளியில் வரவில்லை. தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதால் தி.மு.க., வின் நிலைப்பாட்டையே எடுக்க வேண்டும்; அப்படியென்றால் தி.மு.க.,வின் கொறடா உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
சட்டசபைக்கு வந்தால் எதிர்த்து வெளிநடப்பு செய்ய வேண்டும்; ஆனால் விஜய்யை ஆதரிக்கவும் வேண்டும். இதனை தவிர்க்கவே ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அடுத்து வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, த.வெ.க., பக்கம் ம.தி.மு.க., சாய்கிறதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்