தி.மு.க., தோல்விக்கு பொறுப்பேற்ற ஸ்டாலின்!
சென்னை: ''சட்டசபை தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். இந்த தேர்தலில் நடந்திருப்பது, புது விதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. யாராவது செயல்பட முடியாது என நினைத்தால் விலகி விடுங்கள்,'' என, திமு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, ஸ்டாலின் பேசியதாவது:
நடந்து முடிந்த தேர்தலில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. புதிய அரசும், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தயவில் தான் அமைந்துள்ளது. பொது வாழ்க்கைக்கு வந்தால் வெற்றி, தோல்வி சகஜம்; ஏற்ற இறக்கங்கள் இருக்கும்; மேடு, பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட, நமக்குத் தான் அதிகம்.
|
தேர்தல் தோல்விக்கு ஒருவர் இன்னொருவரை குற்றம் சொல்கிறார். அவர் இன்னொருவரை கைகாட்டுகிறார். இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்லி கொண்டே இருந்தால், ஒரு முடிவே இருக்காது. அப்படியென்றால், இதற்கு யார் தான் பொறுப்பு?
யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். தலைவர் என்ற முறையில், நானே இந்த தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்; அதுதான் நியாயம். ஆய்வு செய்வது அவசியம் தான்; ஆனால், அடுத்தவர் மீதான அவதுாறாக, பழியாக இருக்கக் கூடாது.
இந்த தேர்தலில் நடந்திருப்பது, புது விதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்னைகள் இருக்கின்றன. எல்லாரும் இதை பரிசீலித்து பார்க்க வேண்டும்; ஆய்வு செய்ய வேண்டும். ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதி வாரியாக, அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். தி.மு.க., அமைப்பில் செய்யப் போகிற இந்த மாற்றங்களுக்கு முன், நாம் முதலில் மாறியாக வேண்டும்; யாரும் விதிவிலக்கு இல்லை.
இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின், மாநாடுகள்,- பொதுக்கூட்டங்கள்,- ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டிய களமாக சமூக வலைதளங்கள் உருவெடுத்துள்ளன. இதை நான் கடந்த ஐந்தாண்டுகளாக, பல முறை வலியுறுத்தினேன்.
கட்சியினர் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் நேரடியாக பங்கெடுத்து செயல்பட வேண்டும். வரும் காலத்தில் பிரசார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். முன்னர் டீக்கடையில் அமர்ந்து அரசியல் பேசினோம். இனி சமூக வலைதளங்களில் தான் பேச வேண்டும்.
கட்சியை சீரமைத்து, புத்துணர்ச்சியை கொடுப்போம். நிர்வாகிகள் ஒற்றுமை தேவை. கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைக்க வேண்டும். ஒற்றுமை இல்லை என்றால் வெற்றி என்பது சாத்தியம் இல்லை. மாவட்ட செயலர்கள் மட்டுமே முக்கியம் என, ஆகி விடக்கூடாது. எல்லாருமே முக்கியம் தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் துாண்களும் முக்கியம்.
மாவட்ட செயலர்கள் யாராவது என்னால் செயல்பட முடியாது என, நினைத்தால் விலகி விடுங்கள். ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தால், மறு தேர்தலில் வென்று காட்டி இருக்கிறோம். இந்த தோல்வி தற்காலிகமானதே. வெற்றியை நோக்கி பயணிப்போம். திட்டமிடுவோம், தீவிரமாக உழைப்போம். மீண்டு வருவோம்; மீண்டும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்