வேட்பாளருடன் நால்வர் மட்டும் :கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுரை
சூலுார்: 'வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன், நால்வர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என, சூலுார் தேர்தல் நடத்தும் அதிகாரி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, வேட்பு மனுத் தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் பேசியதாவது:
வேட்பு மனுத்தாக்கல், வரும் 30ம் தேதி துவங்குகிறது. 100 மீட்டர் வரை மனுத்தாக்கல் செய்ய வருவோர் மூன்று வாகனங்களில் வரலாம். மனுத்தாக்கல் செய்யும் போது, வேட்பாளருடன் நால்வர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிரசார வாகனங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து உரிய அனுமதி வாங்க வேண்டும். கூம்பு ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூடாது. இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது.
பொதுக்கூட்டம், உள்ளரங்க கூட்டம் மற்றும் கொடி கட்டுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்களை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு, தாலுகா அலுவலகத்தில், தேர்தல் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை அனைவரும் முழுமையாக பின்பற்றி, ஓட்டுப்பதிவு சுமூகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்