அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, கோவையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தொண்டாமுத்துார் வேட்பாளருமான, வேலுமணி சந்தித்து பேசினார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், கோவையில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தோல்வி அடைந்தார். ஆனாலும் அவருக்கு, கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டல மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இருப்பதால், கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை போல், இம்முறையும் வெற்றி பெற, அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அண்ணாமலை வேண்டுகோளை ஏற்று, அவரை சட்டசபை தேர்தலில் போட்டியிட வைக்காமல், மாநிலம் முழுதும் தீவிர பிரசாரத்திற்கு, பா.ஜ., மேலிடம் பயன்படுத்தி வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், அண்ணாமலையை கடந்த வாரம் சந்தித்தனர். அவர்களுக்காக, அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்தார்.
அவர் பிரசாரம் செய்த இடங்களில் அதிகளவில் கூட்டம் கூடியது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவையில் நேற்று அண்ணாமலையை சந்தித்தார். வரும், 20ம் தேதி வேலுமணியை ஆதரித்து, அண்ணாமலை பிரசாரம் செய்ய உள்ளார். சந்திப்பின்போது, தி.மு.க.,வின் பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்