Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சட்டசபை தேர்தல் திருவிழா:தேர்தல் பணிகளில் பரபரப்பு: அதிகாரிகள் சுறுசுறுப்பு

சட்டசபை தேர்தல் திருவிழா:தேர்தல் பணிகளில் பரபரப்பு: அதிகாரிகள் சுறுசுறுப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தலை திறம்பட நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.



திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல்படி, மொத்தம், 19 லட்சத்து, 55 ஆயிரத்து, 283 பேர், வாக்காளர்கள்உள்ளனர். அடுத்தடுத்த தேர்தல் பணிகளில், ஒட்டுமொத்த அரசு துறையினரும் பம்பரமாக சுழன்றுவருகின்றனர். தொகுதிக்கு தலா ஒன்பது வீதம், 72 பறக்கும்படை, 72 நிலை கண்காணிப்புக்குழுக்கள், தலா 2 வீதம், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



தேர்தல் அறிவிப்பு வெளியான, 15ம் தேதி முதலே, இக்குழுவினர், மாவட்டம் முழுவதும் இரவு பகலாக ரோந்து சென்று, தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கலெக்டர், மாவட்ட தேர்தல் அலுவலராக செயல்படுகிறார். தொகுதிக்கு ஒருவர் வீதம் தேர்தல் நடத்தும் அலுவலர் - 8 பேர், தொகுதிக்கு 2 பேர் வீதம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் - 16 பேர் மற்றும் மண்டல அலுவலர்கள் என மொத்தம், 307 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



15 ஆயிரம் பேர் தயார்



ஓட்டுச்சாவடி பணிகளுக்காக, மைக்ரோ அப்சர்வர்கள் மொத்தம், 179 பேர், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் - 3,390, ஓட்டுப்பதிவு அலுவலர்கள் - 10,170 பேர், பி.எல்.ஓ.,க்கள் - 2,822, கண்காணிப்பு அலுவலர்கள் - 20 என, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளில், போலீஸ் அதிகாரிகள் 300க்கும் மேற்பட்டோர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர்.



படிவங்கள் வந்தாச்சு...



தேர்தலில், வேட்பாளர் முகவர் நியமனம், தபால் ஓட்டு, சர்வீஸ் வாக்காளர் தபால் ஓட்டு அல்லது பிராக்ஸி ஓட்டு செலுத்துவது உள்பட பயன்படுத்துவதற்கான பல்வேறுவகையான படிவங்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளன. அடுத்தடுத்து தேர்தல் படிவங்கள் தருவிக்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுவருகிறது. மாவட்ட ஸ்ட்ராங் ரூமில், 3,752 கன்ட்ரோல் யூனிட், 5,336 பேலட் யூனிட், 3,889 விவி பேட் தயாராக உள்ளன. வரும் 23ம் தேதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.



பதற்றமான ஓட்டுச்சாவடி



மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், 1,112 ஓட்டுச்சாவடி மையங்களில், 2,822 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற பிரச்னைகள் அடிப்படையில், பதற்றமான சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தவகையில், 129 ஓட்டுச்சாவடிகளை பதற்றமானவையாக வகைப்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.



8 இடத்தில் மகளிர் மட்டும்



ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர் காத்திருக்க இருக்கை உள்பட கூடுதல் வசதிகளுடன் மாதிரி ஓட்டுச்சாவடிகள், மகளிர் மட்டும் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். 'பிங்க்' நிறத்தில் அமைக்கப்படும் மகளிர் மட்டும் ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வேட்பாளரின் முகவர்கள் அனைவரும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். நடப்பு தேர்தலில், மாவட்டத்தில், மொத்தம், 8 மகளிர் மட்டும், மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



மடத்துக்குளத்தில், மலைப்பகுதியில் உள்ள மாவடப்பு, தழிஞ்சி, கோடந்துார் ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகள், போக்குவரத்து, தொலை தொடர்புக்கு சிக்கலானதாக உள்ளன. அந்த ஓட்டுச்சாவடிகளில் திறம்பட தேர்தல் நடத்துவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



தபால் ஓட்டு 44 ஆயிரம் பேர்



மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட 14,963 வாக்காளர்கள், 11,499 மாற்றுத்திறனாளிகள், 189 சர்வீஸ் வாக்காளர் மற்றும் ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபடும் 14 ஆயிரம் பேர், போலீசார் 3,320 பேர், டிரைவர், நடத்துனர், 450 பேர் உள்பட 44 ஆயிரத்து 433 பேர், தபால் ஓட்டு பதிவு செய்ய தகுதியானவர்களாக உள்ளனர். இவர்களிடமிருந்து படிவம் 12-டி பூர்த்தி செய்து பெறப்பட்டுவருகிறது.



இறந்த, இரட்டை பதிவு, இடம்பெயர்ந்தோர் நீக்கப்பட்டு, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்டச்செய்வதற்காக, தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் முக்கியமான தேர்தல் திருவிழாவில், தவறாமல் பங்கேற்று, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டியது வாக்காளர் ஒவ்வொருவரின் கடமை.

தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்டச்செய்வதற்காக, தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் முக்கியமான தேர்தல் திருவிழாவில், தவறாமல் பங்கேற்று, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டியது வாக்காளர் ஒவ்வொருவரின் கடமை.



'பிங்க்' நிறத்தில் அமைக்கப்படும் மகளிர் மட்டும் ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வேட்பாளரின் முகவர்கள் அனைவரும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். நடப்பு தேர்தலில், மாவட்டத்தில், மொத்தம், 8 மகளிர் மட்டும், மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

Advertisement