நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! தேர்தல் செலவின பார்வையாளர் எச்சரிக்கை
பொள்ளாச்சி: ''வேட்பாளர்கள் 40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது; விதிமுறை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி தோர்தல் செலவின பார்வையாளர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் செய்யும் ஒவ்வொரு செலவினத்துக்கும் ஆணையமே விலை பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவினங்களை பார்வையிட தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர் ஸ்ரீதர் டோரா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பொள்ளாச்சி வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், தேர்தல் செலவின பார்வையாளர் நிருபர்களிடம் கூறியதாவது:
வேட்பாளர்கள், 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்யக்கூடாது. தேர்தல் செலவினங்கள் குறித்து கண்காணிப்பு செய்யப்படும். வேட்பாளர்கள், தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்கும் போது சரிபார்க்கப்படும். விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக செலவு செய்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களை கவர பரிசு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக 'விஜில் ஆப்'பில் பதிவு செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வணிகம் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு பணம் எடுத்து செல்வோர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
மாட்டு சந்தை வியாபாரிகள், விற்பனையாளர், பயனாளர்களிடம் இருந்து உரிய ஆவணங்களை பெற்று, பண பரிவர்த்தைக்கான ரசீதுகளை முறையாக பெற்று செல்ல வேண்டும். வணிக ரீதியான பண வரித்தனை குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்