Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிக்கவில்லை: பஸ் வசதி இல்லாததால் ஓட்டளிக்க முடியாத பரிதாபம்

ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிக்கவில்லை: பஸ் வசதி இல்லாததால் ஓட்டளிக்க முடியாத பரிதாபம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்
சென்னை, கோவை போன்ற ஊர்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் ஓட்டு போடுவதற்கு சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆங்காங்கே அவதிப்பட்டனர். எனினும், ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிக்கப்படாதது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளம் பெண்களும் ஆண்களும் சென்னை, கோவை கல்லுாரிகளில் படிக்கின்றனர். பலர் பணியிலும் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டு சொந்த ஊர்களில் இருக்கின்றன.
இன்று தமிழக சட்டசபை ஓட்டுப்பதிவு வேலை நாளான வியாழக்கிழமை நடக்கிறது. எனவே, ஓட்டுப்போடுவதற்கு முன்னதாகவே சொந்த ஊர்களுக்கு கிளம்ப முடியாத இவர்கள், நேற்று இரவு முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் துவங்கினர்.
அவர்களை ஏற்றிச் செல்ல அந்த பஸ்ஸ்டாண்டுகளில் இருந்த பஸ்களின் எண்ணிக்கை போதவிலை. சில நிமிடங்களில் நின்றுகொண்டு இருந்த அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தன.
ஓட்டுப்பதிவுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கூடுதலாக 1400 பஸ்கள் இயக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை நம்பி இந்த இளைஞர்கள் பஸ் ஸ்டாண்டுகளில் குவிந்தனர். ஆனால், அரசு சொன்னது போல் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது போல் தெரியவில்லை.
நேரம் ஆக ஆக, கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டிலும் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலும் டென்ஷன் அதிகம் ஆனது. காத்து காத்து வெறுத்துப்போன மக்கள், திடீர் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை அங்கிருந்த போலீசார் அமைதிப்படுத்தியபடி இருந்தனர். ஆனாலும் இளைஞர்கள் சில கட்சிகளுக்கு ஆதரவாகவும், சில கட்சிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த பலர், விழுப்புரம், திருச்சி என்று மாறி மாறி பஸ்களில் புறப்பட்டனர். விழுப்புரத்தில் இறங்கியவர்களுக்கு அங்கிருந்து மாறிச் செல்ல பஸ்கள் இல்லை். திருச்சி சென்றவர்களுக்கு அங்கிருந்து மாறிச் செல்ல பஸ்கள் இல்லை. இதனால் அவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்கள் தவிர, பலர் கார்களிலும், டூ வீலர்களிலும் ஊருக்கு புறப்பட்டனர். இதனால் ஜிஎஸ்டி ரோட்டில் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், டோல்கேட்டுகளில் தெற்கு நோக்கி செல்லும் வாகனங்களுக்கான என்ட்ரிகளை அதிகப்படுத்தினர்.
சென்னையில் இருந்து அதிகாலையே புறப்பட்ட பஸ்கள் விழுப்புரத்தை அடையவே பல மணி நேரம் ஆனது. சொந்த வாகனங்களில் புறப்பட்ட பலர், தொடர்ந்து செல்ல முடியாததால் மீண்டும் சென்னைக்கே திரும்பினர். பலர் ஏதோ நம்பிக்கையில் தொடர்ந்து ஊருக்கு பயணப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே சிக்கி அவதிப்படுவதால், ஓட்டுப்பதிவு முடிவதற்குள் செல்ல முடியுமா என்ற சந்தேகம் அடைந்தனர். எனவே, ‛‛ஓட்டுப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீடிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஓட்டுப்பதிவு நேரத்தை தேர்தல் ஆணையம் அதிகரிக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பேர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பஸ் வசதி இன்றி சிரமத்துக்கு ஆளான வாக்காளர்கள் மத்தியில், ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்காத தேர்தல் ஆணையத்தின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பஸ் இல்லாமல் ஓட்டளிக்க போக முடியாத பயணிகள், சமூக வலைதளங்களில் குமுறிய காட்சிகளின் லிங்க் இதோ!
https://www.instagram.com/reel/DXdbX2ZDFe7/?igsh=MXdvM2cxbm95bHVuaQ==

https://www.instagram.com/reel/DXc1dmdAXdy/?igsh=ajRlcXB3enQyNmZj

https://www.instagram.com/reel/DXdYFnAjARR/?igsh=NndhdGVvMWpoaGUx

https://www.instagram.com/reel/DXdhX37k3ac/?igsh=MXVncGprZ280emQ3eA==

Advertisement