கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்து
சென்னை: முதல்வர் ஸ்டாலின், இன்று தேர்தல் பிரசாரம் துவங்கும் நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு, தேநீர் விருந்து அளித்து, ஆலோசனை நடத்தினார்.
அதன் பின், 'தி.மு.க., கூட்டணி வெற்றி கூட்டணி' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவடைந்து, காங்., தவிர மற்ற கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
தேர்தல் பிரசார பணிகளை, மாநிலம் முழுதும் விரைவுப்படுத்துவது குறித்து, சென்னை அறிவாலயத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த முதல்வர் ஸ்டாலின், அனைத்து தலைவர்களுக்கும் தேநீர் விருந்து அளித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
''அப்போது, அவர் பேசுகையில், மாபெரும் வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. ஏற்கனவே இருந்த கூட்டணியை விட, இன்னும் சில கட்சிகளை இணைத்து, வெற்றிகரமான கூட்டணியை அமைத்துள்ளோம்,'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன் பேசுகையில், ''வெல்வோம் ஒன்றாக என்ற சொல்லில் பன்முகம் இருக்கிறது. தமிழகம் வெல்லும் என்ற முழக்கம், இந்தியாவின் கூட்டிசையின் போர் முழக்கம். பா.ஜ.,வை வீழ்த்தி, தமிழகம் வெல்லும். இந்தியாவிற்கு புது திசையை காட்டுவோம்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் பேசுகையில், ''மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என, பணிகளை துவங்க வேண்டும். மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார்,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் தீட்டிய திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் பிரசாரமாக இருக்கப் போகின்றன. கடந்த 2021ம் ஆண்டின் தேர்தலை ஒப்பிட்டு பார்கும்போது, 210 தொகுதிகளில் வெற்றி உறுதி. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்,'' என்றார்.
ம.நீ.ம., கட்சியின் தலைவர் கமல் பேசுகையில், ''மே மாதம் ஒரு விழா நடக்கும். அந்த விழாவில் மீண்டும் மாண்புமிகு முதல்வரே என்று அழைக்க போகிறேன். மதநல்லிணக்க முற்போக்கு கூட்டணி என்கிறோம். முற்போக்கு தவிர வேறு வழியில்லை. பிற்போக்கு இருக்க முடியாது.
''அது வேண்டாம் என முடிவெடுத்த நாம் இங்கே கூடியிருக்கிறோம். என் தொண்டர்களுக்கும், முழு வெற்றிக்கான உழைப்பை கொடுக்க அன்பு கட்டளையாகவும், சிலருக்கு ஆணையாகவும் பிறப்பித்திருக்கிறேன்,'' என்றார்.
தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் பேசுகையில், ''கூட்டணியில் நாங்கள் தான் புதுசு. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், அ.தி.மு.க., கூட்டணி மீது நம்பிக்கை இல்லை. நம் கூட்டணி மீது தான் நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்,'' என்றார்.
முதல்வர் ஸ்டாலின், இன்று தேர்தல் பிரசாரம் துவங்கும் நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நேற்று தேநீர் விருந்து அளித்து ஆலோசனை நடத்தினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்