முதல்வர் ஸ்டாலின் ஒரு 'டம்மி பீஸ்' : பழனிசாமி ஆவேசம்
மதுரை: ''முதல்வர் ஸ்டாலின் 'டிவி'யில் வீரவசனம் பேசியதை பார்த்தபோது சுந்தர் சி, வடிவேலு நடித்த படத்தின் காமெடி காட்சி தான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு 'டம்மி பீஸ்!'. அதுதான் அவரது நிலை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
மதுரை பழங்காநத்தத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன் தினம் பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பேசியதை 'டிவி'யில் பார்த்தேன். அதை பார்த்தபோது சுந்தர் சி நடித்த படத்தில் வடிவேலு சொல்லும் நகைச்சுவை காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
'என் ஏரியாவுக்கு வந்து பார்' என வீர வசனம் பேசுவார் வடிவேலு; இறுதியில் மன்னித்துக் கொள்ளுங்கள் என காலில் விழுந்து கெஞ்சுவார். அப்படித்தான், ஸ்டாலின் நிலை பரிதாபமாக உள்ளது. அவர் ஒரு டம்மி பீஸ். கருணாநிதி காலத்தில் மதுரை மண்ணில் கால் வைக்க முடியாத நிலையில் இருந்தார் ஸ்டாலின்.
தி.மு.க., ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் முறைகேடு நடந்து, மேயர் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்து விட்டனர். இப்படி ஒரு ஆட்சி தேவையா?
உங்களுடைய வரி பணத்தை அபகரிக்கும் அரசு தேவையா? அமைச்சர் நேரு செய்த முறைகேட்டை அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.,க்கு பரிந்துரைத்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை. தி.மு.க., ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மோடி, இவர்களின் ஊழல்களை சொல்லி 'ஆப்பு' அடித்து விட்டார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மோடி நமக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்.
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அ.தி.மு.க., அரசு மட்டும் தான். கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் கூட பிடித்தம் இல்லாமல் முழு சம்பளம் வழங்கப்பட்டது.
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என முதல்வர் பச்சைப் பொய்யை சொல்கிறார். 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்திற்கு புதிய திட்டங்களை கொடுத்தீர்களா?
சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடல் மண்ணை அள்ளி, கடலில் தான் போட்டனர். இது ஒன்று தான் அவர்கள் கொண்டு வந்தது. தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டங்கள் அனைத்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்