Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எம்.ஜி.ஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: பா.ஜ., அண்ணாமலை

எம்.ஜி.ஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: பா.ஜ., அண்ணாமலை

துாத்துக்குடி: ''தமிழக மக்கள், தி.மு.க., ஆட்சியை ஒரு முறை பார்த்து விட்டால், அடுத்த முறை ஒதுக்கி வைத்து விடுவர்,'' என, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.

அப்போது, அண்ணாமலை பேசியதாவது: கோவில்பட்டியில் தி.மு.க., வேட்பாளரின் பெயர் கருணாநிதி. இந்த பெயர் இருந்தாலே தேர்தலில் தோற்க மாட்டார்கள் என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, பிரசாரத்தில் கூறியுள்ளார்.

ஆனால், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இருக்கும்போது, கருணாநிதியின் முதல்வர் கனவு மூன்று முறை கலைந்து போனது. எம்.ஜி.ஆரிடம் மூன்று முறை தோற்று போனவர் கருணாநிதி.

தமிழக அரசியல் வரலாற்றில், கருணாநிதி ஒரு முறை முதல்வராக வந்தால், தொடர்ச்சியாக இரண்டாவது முறை முதல்வராக வந்தது இல்லை. தி.மு.க., ஆட்சியை ஒரு முறை பார்த்து விட்டால், அடுத்த முறை மக்கள் ஒதுக்கி வைத்து விடுவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை அல்ல, இரண்டு முறை தி.மு.க., ஆட்சியை ஒதுக்கி வைத்திருந்தார்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 2,050 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன; 8,008 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அருகில் கூட கஞ்சா விற்பனை நடக்கிறது.

அதில், தி.மு.க.,வினரே குற்றவாளிகளாக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக கனிமொழி பொய் சொல்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

கோவையில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை, ''தமிழகத்துக்கு ஆகவே ஆகாத ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்; இருக்கவே கூடாத கட்சி என்றால் அது தி.மு.க., தான்.

''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், திருடன் கையில் சாவி கொடுத்தது போல். தி.மு.க.,வும், காங்.,கும் ஒன்று சேர்ந்த போதெல்லாம் தமிழகத்துக்கு எதிராகத் தான் செயல்பட்டுள்ளனர்,'' என விமர்சித்தார்.

Advertisement