முதல்வருடன் கிறிஸ்துவ அமைப்பினர் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளை சேர்ந்த ஆயர்கள் நேற்று சந்தித்தனர். பின், 'த.வெ.க., மற்றும் நா.த.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம்' என, கிறிஸ்துவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பேராயர் சின்னப்பா தலைமையில், பல்வேறு கிறிஸ்துவ அமைப்பினர் சந்தித்தனர். அப்போது, தி.மு.க., - எம்.பி., வில்சன் உடனிருந்தார்.
தென்னிந்தியத் திருச்சபை, இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை, தமிழ்நாடு ஆயர் பேரவை, ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, ஜீசஸ் கால்ஸ், ஏ.ஜி., திருச்சபை, இந்திய நற்செய்தி திருச்சபை, சிரியோ மலபார் கத்தோலிக்க திருச்சபை, இயேசு மீட்கிறார் அமைப்பு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக, ஸ்டாலினுக்கு, ஆயர்கள் நன்றி தெரிவித்தனர்.
அப்போது, கிறிஸ்துவ இளைஞர்கள், இளம்பெண்கள் ஓட்டுகள், த.வெ.க.,வுக்கு செல்லாமல் தடுக்கும்படி, ஆயர்களிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் , கிறிஸ்துவ அமைப்புகளின் பெயரில் வெளியான துண்டு பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தை கலவர பூமியாக்கி காலுான்ற துடிக்கும், சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டியது, கிறிஸ்துவர்களின் கடமை.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெற, மத்திய பா.ஜ., அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதால், கிறிஸ்துவ நிறுவனங்களின் பணிகள், பின்னடைவை சந்தித்து வருகின்றன.
அ.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், விஜயுடன் கூட்டணி அமைப்பதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். சினிமா பிரபலம் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு, ஓட்டு பெற சூழ்ச்சி நடக்கிறது. நிஜம் வேறு, நிழல் வேறு என்பதை கிறிஸ்துவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்றுவதை மட்டுமே, ஒற்றை இலக்காக த.வெ.க., வைத்துள்ளது.
பா.ஜ., தன் கருத்தியல் எதிரி என, விஜய் கூறினா லும் அதை செயலில் காட்ட வில்லை. நாம் தமிழர் கட்சியின் சீமான், முருகன் நம் முப்பாட்டன் எனக் கூறி, தமிழ் ஹிந்துத்துவாவை முன்மொழிகிறார்.
தி.மு.க., அரசு மீது, பல குறைகள் இருந்தாலும், மதவாத அரசியலை எதிர்த்து களமாடுகிறது. இத்தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில், நாம் தெளிவு பெற வேண்டும்.
எனவே. சிறு, சிறு கட்சிகளுக்கு ஓட்டளித்து மதவாத சக்திகள் தமிழகத்தில் வளர இடமளித்துவிடக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்