Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மோடி, அமித் ஷா பிரசாரம் செய்தும் 27ல் பா.ஜ.,வுக்கு 1ல் தான் வெற்றி

மோடி, அமித் ஷா பிரசாரம் செய்தும் 27ல் பா.ஜ.,வுக்கு 1ல் தான் வெற்றி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்தும், மத்திய அமைச்சர்கள் பலர் முகாமிட்டும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.,வால், ஊட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 27 தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சியின், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களான நயினார் நாகேந்திரன் - சாத்துார், வானதி சீனிவாசன் - கோவை வடக்கு, காந்தி - நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிட்டனர்.

ஆதரவு

மத்திய அமைச்சர் முருகன் - அவிநாசி, முன்னாள் கவர்னர் தமிழிசை - மயிலாப்பூர் என போட்டியிட்டனர். ஏற்கனவே பல தேர்தல்களில் போட்டியிட்டவர்களுக்கே, அக்கட்சியில் மீண்டும் 'சீட்' வழங்கப்பட்டது.

அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல், கடந்த மார்ச் இறுதியில் சென்னை வந்தார்.

ஓட்டுப்பதிவு முடியும் வரை சென்னையிலேயே தங்கி கோவை, மதுரை, திருப்பூர் என, முக்கிய நகரங்களுக்கு சென்று, தொழில் துறையினர், வர்த்தக சங்க பிரதிநிதிகளை சந்தித்து, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார்.

பா.ஜ., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தபோது, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால் உட்பட பலர் வந்தனர். வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 'ரோடு ஷோ' வாயிலாக, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

'ரோடு ஷோ'

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகளில் 'ரோடு ஷோ' நடத்தி ஆதரவு திரட்டினார். அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க, பல்வேறு வியூகங்களை அமித் ஷா வகுத்திருந்தார்.

அவர் எடுத்த நடவடிக்கையால் தான், பா.ம.க., - அ.ம.மு.க., ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தன. ஆனால், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.,வால், ஒரே தொகுதியாக ஊட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.

நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி என, 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களும், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட 26 பேரும் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

Advertisement