தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி; ஸ்டாலின் முடிவெடுத்தால் கட்டுப்படுவோம்: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
- நமது நிருபர் -
''தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதாக வெளியாகும் செய்திக்கு, எங்கள் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தால், அதற்கு தி.மு.க., கட்டுப்படும். அப்படி ஒரு முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. தலைவர் முடிவே, எங்கள் முடிவு,'' என, தி.மு.க., செய்தி தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பதவி ஏற்க அனுமதி கேட்டு, நேற்று கவர்னரை சந்தித்து, த.வெ.க., தலைவர் விஜய் பேசிய அதே நேரத்தில், சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடந்தது.
ஆலோசனை
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து, ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, விஜய் தலைமையில் த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டது குறித்து, சண்முகம், வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் ஸ்டாலினிடம் தகவல் தெரிவித்தனர்.
அதற்கு ஸ்டாலின், 'நீங்கள் யாரும் தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி விடாதீர்கள்; அவசரப்பட்டு த.வெ.க.,விற்கு ஆதரவு அளிக்க வேண்டாம். 'உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவை சொல்லுங்கள். தி.மு.க., கூட்டணியிலேயே தொடருங்கள்' என, கேட்டுக் கொண்ட தாக, தகவல் வெளியானது.
இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, தி.மு.க., வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன் வந்திருப்பதாக தகவல் பரவியது. இது குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முடிந்த பின், டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், த.வெ.க.,வுக்கு சென்றுள்ளது. எங்கள் கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்டு, ஐந்து இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற 23 இடங்களில் அவர்களை தோற்கடித்தது யார்? இதை காங்கிரஸ் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், சிந்திக்காமல் த.வெ.க.வுக்கு ஆதரவு தருகிறது.
பெரும்பான்மை இல்லை
தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதாக வெளியாகும் செய்திக்கு, எங்கள் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தால், அதற்கு தி.மு.க., கட்டுப்படும். அப்படி ஒரு முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. தலைவர் முடிவே எங்கள் முடிவு.
த.வெ.க., ஆட்சி அமைக்கக் கூடாது என, நாங்கள் தடுக்கவில்லை. கவர்னரிடம் அனுமதிக்க கூடாது என கூறவில்லை. கவர்னர் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை மட்டும்தான் கேட்கிறார். அதை காண்பித்தால், அவர் அனுமதி கொடுக்கப் போகிறார். அதை நாங்கள் எப்படி தடுக்க முடியும்?
பெரும்பான்மை இல்லாமல், பதவி பிரமாணம் செய்து வைத்து, ஆட்சி கலைக்கப்பட்டால், அதற்கு கவர்னர் தானே பொறுப்பு. அதனால்தான், அவர் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை கேட்கிறார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேச அனுமதி இல்லை
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சட்டசபை குழுத் தலைவராக, இளைஞரணி செயலர் உதயநிதி தேர்வு செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், சட்டசபை குழு நிர்வாகிகள் தேர்வு, அக்கூட்டத்தில் நடக்கவில்லை.
எம்.எல். ஏ.,க்கள் யாரையும் பேச அனுமதிக்கவில்லை. வரும் 10ம் தேதி வரை எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும்; வெளியூருக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்