அத்திக்கடவு திட்ட தொகுதிகளை தட்டிப்பறித்த த.வெ.க.!
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் வீசிய விஜய் அலையில், அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையளித்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட சட்டசபை தொகுதிகளும் கை நழுவின; ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு தொகுதியை மட்டும், அ.தி.மு.க. தக்க வைத்திருக்கிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்த 'அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம்', வரும் தேர்தலில் யாருடைய அரசியல் தாகத்தைத் தீர்க்கப்போகிறது? என்பது தேர்தலுக்கு முந்தைய கணிப்பாக இருந்தது.
இந்த மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம்; 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்பதுதான் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சூலுார், கவுண்டம்பாளையம்; ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கோபி; திருப்பூர் மாவட்டம், அவிநாசி, திருப்பூர் வடக்கு என, ஏழு சட்டசபை தொகுதிகள் நேரடி பயன் பெறுகின்றன.
அ.தி.மு.க. கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், 'அத்திக்கடவு திட்டம் நிரந்தர ஓட்டு வங்கியை ஏற்படுத்தும்' என்பதே அ.தி.மு.க.வின் 'கணக்கு'. காரணம், முதல்வராக பழனிசாமி பதவி வகித்த போது, இத்திட்டத்திற்கென 1,652 கோடி ரூபாயை முழுக்க முழுக்க மாநில அரசு நிதியில் இருந்து ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றினார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த, 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை (2026) சட்டசபை தேர்தலிலும் அத்திக்கடவு திட்டம், இத்தொகுதிகளில் இரட்டை இலையை மலரச் செய்யும் என அக்கட்சியினர் நம்பியிருந்தனர்.
ஆனால், மாநிலம் முழுக்க வீசிய விஜய் அலையில், விசில் சின்னத்துக்கு வாக்காளர்கள் ஓட்டுகளை அள்ளி வீசினர்; அந்த அலையின் தாக்கம் அத்திக்கடவு தொகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. பெருந்துறை தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது; மற்ற அனைத்து தொகுதிகளிலும் இரண்டாமிடம் பெற்றிருக்கிறது.
அத்திக்கடவு திட்டத்தால் பயனடையும் தொகுதிகளில் நிலவரம் வருமாறு:
* பெருந்துறை தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. 85,125 ஓட்டு பெற்ற அ.தி.மு.க. இம்முறை, 70,302 ஓட்டுகளை பெற்று தொகுதியை தக்க வைத்தது.
* கோபி தொகுதியில், கடந்த முறை அ.தி.மு.க. 1.05 லட்சம் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்ற நிலையில், இம்முறை த.வெ.க. 82,612 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது. இத்தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன், இம்முறை த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
* சூலுார் தொகுதியில் கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. 1.18 லட்சம் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது. இம்முறை (2026), த.வெ.க. 90,531 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது; அ.தி.மு.க. 85,741 ஓட்டு பெற்று இரண்டாமிடம் பெற்றது.
* கவுண்டம் பாளையம் தொகுதியில், கடந்த 2021ல் அ.தி.மு.க. 1.35 லட்சம் ஓட்டுகளை பெற்றது; இம்முறை த.வெ.க. 1.46 லட்சம் ஓட்டுகளை பெற்று வெற்றியை தட்டி பறித்திருக்கிறது; அ.தி.மு.க. 1.04 லட்சம் ஓட்டுகளை பெற்று இரண்டாமிடம் பிடித்தது.
* அவிநாசி தொகுதியில், கடந்த முறை, அ.தி.மு.க. 1.17 லட்சம் ஓட்டுகளை பெற்ற நிலையில், இம்முறை த.வெ.க. 84,209 ஓட்டுகளை அறுவடை செய்திருக்கிறது; இம்முறை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. 68,836 ஓட்டுகளை பெற்றது.
* மேட்டுப்பாளையம் தொகுதியில், கடந்த முறை அ.தி.மு.க. 1.05 லட்சம் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது. இம்முறை த.வெ.க. 75,664 ஓட்டுகளை பெற்று வெற்றியை தட்டிப்பறித்தது.
* திருப்பூர் வடக்கில் கடந்த முறை அ.தி.மு.க. 1.13 லட்சம் ஓட்டுகளை பெற்றது. இம்முறை த.வெ.க. 1.31 லட்சம் ஓட்டு பெற்று வெற்றியை தட்டிப் பறித்திருக்கிறது. இதன்படி, அத்திக்கடவு திட்டத்தின் நேரடி பயன் பெறும், 7 சட்டசபை தொகுதிகளில், 6 தொகுதிகளை த.வெ.க. தக்க வைத்திருக்கிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்