Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க., - மா.செ.,க்களுக்கு கல்தா? அதிரடி திட்டத்தில் ஸ்டாலின்!

தி.மு.க., - மா.செ.,க்களுக்கு கல்தா? அதிரடி திட்டத்தில் ஸ்டாலின்!

- நமது நிருபர் -
தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு முடிவுக்கு பின், மாவட்ட செயலர்களிடம் ராஜினாமா கடிதம் பெற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய, 36 பேர் கொண்ட குழுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அக்குழுவினருக்கு, ஸ்டாலின் கூறிய அறிவுரைகள்:

ஒவ்வொருவரும் என் பிரதிநிதியாக செல்வதால், விருப்பு வெறுப்பின்றி, கட்சியினர் கூறும் உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் வரக் கூடாது. அதேபோல், யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.

ஆலோசனை

தோல்விக்கான காரணமாக, என் மீதோ, என் குடும்பத்தினர் மீதோ புகார் தெரிவித்தாலும், மறைக்காமல் என்னிடம் தெரிவிக்க வேண்டும். நிர்வாகிகளின் உண்மையான உணர்வு என்ன என்பது எனக்குத் தேவை. கட்சியினர் குறை கூறும் நபர்களிடம், ஆய்வு பற்றிய எந்த தகவலையும் கூறக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆய்வு பணி குறித்து, அக்குழுவினரிடம், ஸ்டாலின் நேற்று கேட்டறிந்தார். பின், கட்சியின், துணை பொதுச்செயலர் கனிமொழி, இளைஞரணி செயலர் உதயநிதி, அமைப்புச் செயலர் பாரதி, முன்னாள் அமைச்சர் வேலு மற்றும் நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ராஜினாமா கடிதம்


இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: அடுத்த மாதம் 3ம் தேதி, கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், மாநில அரசியலுக்கு கனிமொழியை கொண்டு வருவது குறித்தும், ஸ்டாலின் ஆலோசித்தார்.

தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு முடிந்த பின், தி.மு.க., மாவட்டச் செயலர்களை தனித்தனியாக அழைத்து, ஸ்டாலின் பேச உள்ளார்.

தி.மு.க.,வில், 30 ஆண்டுகளாக மாவட்ட செயலர்களாக உள்ளவர்களிடமும், தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்ட செயலர்களிடமும் ராஜினாமா கடிதங்களை பெற, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement