இ.பி.எஸ்.,சை நீக்க திட்டம்? மா.செ.,க்களிடம் சண்முகம் தரப்பு பேச்சு
மதுரை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் இருந்து, பழனிசாமியை நீக்குவதற்காக, மாவட்ட செயலர்களுடன் சி.வி.சண்முகம், வேலுமணி தரப்பினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலில், அதி.மு.க., மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால், கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர் தனியாக செயல்படுகின்றனர்.
இதையடுத்து, 26 மாவட்ட செயலர்களை பதவியில் இருந்து பழனிசாமி நீக்கினார். எனவே, பழனிசாமியை, பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்காக, 'அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சண்முகம் தரப்பினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், கட்சியை நிர்வகிக்க, 82 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு பழனிசாமி மீது பழி போட்டு, சண்முகம் உள்ளிட்டோர், கட்சியை பிளவுப்படுத்தி விட்டனர்.
தற்போது, தங்கள் மீதான வழக்குகளை நீர்த்து போக செய்யவும், அதிகாரம் பெறவும், தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்து உள்ளனர்.
பொதுக்குழுவில், எல்லோரது ஒப்புதலுடன் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டபோது மவுனமாக இருந்த சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர், அவர்களை மீண்டும் சேர்க்குமாறு இப்போது கூறுவது விசித்திரம்.
இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலர்கள், அமைப்பு செயலர்கள், மாநில பொறுப்புகளில் உள்ளவர்களிடம் சண்முகம் தரப்பினர் பேச்சு நடத்தி, பொதுச்செயலர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்க காய் நகர்த்தி வருகின்றனர். விரைவில் பொதுக்குழுவை கூட்டுமாறு தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வற்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

முதலில் எடப்பாடியாரை நீக்க வேண்டும் என்றவர்கள் கூட தவெக ஆதரவு என்று 25 பேர் இறங்கியதால் எடப்பாடியார் நீக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.கூட்டணிக் கட்சிகளால் இவர்கள் வென்று உள்ளனர்.அந்த நன்றியும் இவர்கள் பேச்சில் இல்லை.