ஒன்றுக்கும் உதவாத 22 கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி: சீமான் தாக்கு
ராமநாதபுரம்: தி.மு.க., மட்டும் தான் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பா. அல்லா, கர்த்தர் மேல் நம்பிக்கை இல்லையா, என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரத்தில் நா.த., வேட்பாளர்கள் முத்து கேசவன் (ராமநாதபுரம்), பிரேம்நாத் (திருவாடானை) ஆகியோரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: ஜாதி, மதம், பணம் கடந்த அரசியலை செய்ய வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க., ஜாதி, மதத்தை வைத்து வெற்றி பெறுகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்போம் என்று அறிவிக்கிறீர்கள். தி.மு.க., ஆட்சியில் குறை இருந்தாலும் அவர்களால் தான் பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என்கின்றனர்.
தி.மு.க., தலைமை ஒரு கோழை. ஒன்றுக்கும் உதவாத 22 கட்சிகளை கூட்டணி சேர்த்து கொண்டு தேர்தலில் நிற்கின்றனர். தி.மு.க., தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்கிறீர்கள். அப்படி என்றால் அல்லா பாதுகாக்க மாட்டாரா. கருணாநிதி தான் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு என்றால் கர்த்தர் பாதுகாக்க மாட்டாரா. சொந்த பிள்ளையை நம்பாமல் வந்தவர், போனவர்களை நம்புகிறீர்கள்.
பா.ஜ., காங்., இரண்டும் நமக்கு எதிரிகள் தான். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தி.மு.க., பா.ஜ., ரகசிய உடன்பாடு வைத்துள்ளது என்று கூறியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறை ரெய்டு என்றவுடன் பிரதமர் மோடியை தேடி சென்றார். இப்படிபட்ட தி.மு.க.,வை நம்புவதை விட்டுவிட்டு மக்கள் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்