Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வாக்காளர் விவரங்களுடன் களம் இறங்கிய தி.மு.க.: புள்ளி விவர கணக்கு கைகொடுக்குமா?

வாக்காளர் விவரங்களுடன் களம் இறங்கிய தி.மு.க.: புள்ளி விவர கணக்கு கைகொடுக்குமா?

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தலில் கட்சி தலைமை அறிவுறுத்தியபடி வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 'மஞ்சள் நோட்டு' மூலம் ஓட்டுகளை திரட்டும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு ஏறத்தாழ ஆறு மாதம் முன்பிருந்தே ஆளும் கட்சியான தி.மு.க., தனது பாணியில் தேர்தல் பணியைத் துவங்கியது. அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச் சாவடி வாரியாக, பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தந்த ஓட்டுச் சாவடியில் உள்ள வாக்காளர்களை குறைந்தபட்சம், 30 சதவீதம் பேரை கட்சியில் இணைக்க திட்டமிட்டு பணியைத் துவங்கினர்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று கட்சியினர் எவர் சில்வர் அண்டா உட்பட பரிசுப் பொருள் வழங்கி அத்துடன் நான்கு எண்கள் கொண்ட டோக்கனையும் தி.மு.க.வினர் வழங்கினர். அதில் ஒரு பரிசு பொருள் வழங்கப்பட்டு, அதற்கான எண் 'டிக்' அடிக்கப்பட்டது. இதுதவிர, தேர்தலுக்கு முன்னதாக மூன்று பரிசுகள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பரிசுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கட்சியினர் தங்கள் பூத் பகுதியில், பி.எல்.ஓ., 2 எனப்படும் பூத் ஏஜன்ட்கள் வீடு வீடாக களம் இறங்கியுள்ளனர். முந்தைய பூத் ஏஜன்ட்கள் பயிற்சியின் போது வழங்கப்பட்ட உபகரணங்களில் மஞ்சள் நோட்டு என்ற பெயரில் ஒரு நோட்டு வழங்கப்பட்டது. இதில், பூத் ஏஜன்ட்கள் தங்களுக்கு உரிய ஓட்டுச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை, எழுத வேண்டும்.

அதில், வாக்காளர் பட்டியல் வரிசை எண், பெயர், மொபைல் எண், வாக்காளர் அட்டை எண், வீடு விவரம், வேலை விவரம், பயன்பெறும் அரசு திட்டம், சார்ந்த கட்சி குறித்த விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, அந்த வாக்காளர் ஓட்டு தங்களுக்கு கிடைக்கும் என்றால் அதற்கான குறியீடு மற்றும் எண்ணிக்கையையும் குறித்துக் கொள்கின்றனர்.
இந்த பட்டியல் அடிப்படையில், தேர்தலின் போது 'கவனிக்கப்படும்' என்ற உறுதி கட்சி நிர்வாகிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தியும், தேர்தல் முடிவில், பட்டியல் எந்த அளவு ஒர்க் அவுட் ஆகியது என்ற அடிப்படையில் பூத் ஏஜன்ட்களுக்கு பரிசு வழங்கப்படுமென கட்சி தலைமை உறுதி கூறியதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அவ்வகையில், ஆளுங்கட்சி போட்டு வரும், புள்ளி விவர கணக்கு கை கொடுக்குமா அல்லது 'பிணக்கு' ஆகி விடுமா என்பதற்கான விடை வாக்காளர்களின் ஆட்காட்டி விரலில் உள்ளது.

Advertisement