வேல்முருகனை வீழ்த்த தி.மு.க., மூவரணி வியூகம்
- நமது நிருபர் -
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை வீழ்த்த, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், பண்ருட்டி தொகுதியில், வேல்முருகன் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டார்.
தி.மு.க., தரப்பில், நெய்வேலி தொகுதியை கொடுக்க விரும்பவில்லை. காரணம், நெய்வேலி தொகுதியில் சுரங்கம் தொடர்பான பணிகள் நிறைய உள்ளன. இதை வைத்து அரசியல்வா திகள் பெரும் பணம் சம்பாதிக்க முடிகிறது.
இப்படி பணம் கொழிக்கும் தொகுதி என்பதால், அதை தனக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என வேல்முருகன் விருப்பம் தெரிவித்தார். அது தனக்கு கிடைக்காது என தெரிந்ததும், அதிருப்தியில் வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளார். எனினும், நெய்வேலி தொகுதியில் தனித்தே களமிறங்க முடிவெடுத்துள்ளார்.
அவரை தோற்கடிக்க, மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகையை களமிறக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர், ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். கடலுார், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் காடுவெட்டி குரு துவக்கிய வன்னியர் சங்கம் வலுவாக உளளது. அம்மாவட்டங்களில் விருத்தாம்பிகை சுற்றுப்பயணம் செய்து, வன்னியர் சங்க நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், விருத்தாம்பிகையை வேல்முருகனுக்கு எதிராக போட்டியிட வைத்து, வன்னியர் சமுதாய ஓட்டுகளை, தி.மு.க., பக்கம் திருப்ப, அந்த சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் துரைமுருகன், பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகிய மூவரணி திட்டமிட்டுள்ளது.
விருத்தாம்பிகையை, தி.மு.க., கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுஉள்ளதாகவும் தெரிகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்