Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'தி.மு.க.,விடம் பணம் வாங்கியது கட்சிக்கு ஏற்பட்ட கறை'

'தி.மு.க.,விடம் பணம் வாங்கியது கட்சிக்கு ஏற்பட்ட கறை'

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கடந்த சட்டசபை தேர்தலில் வாங்கிய ஆறு தொகுதியே குறைவானது என, கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். தற்போது, அதிலும் ஒரு தொகுதியை குறைத்து வாங்கி இருப்பது, உங்கள் தோல்வியா?


தொகுதி குறைந்ததை தோல்வியாக கருத முடியாது. தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும். தி.மு.க., கூட்டணியில், கூடுதல் கட்சிகள் இணைந்தன. இந்த சூழலால் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

'கூட்டணியில் 30, 40 தொகுதிகளை கேட்க, எங்களுக்கு தார்மீக உரிமை உண்டு. எத்தனை தொகுதிகள் கேட்டாலும், அதை ஜனநாயக விரோதமாக முதல்வர் எடுத்துக் கொள்ள மாட்டார்' என பேசிவிட்டு, கடைசியில் ஐந்து தொகுதிகளைப் பெற்றது, கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் உள்ளதே?


கொள்கையை கைவிட்டால்தான் கீழே விழுந்ததாக அர்த்தம். நாங்கள் எந்த கொள்கையையும் கைவிடவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பை கைவிடவில்லை. ஜாதி, மதம் பெயரால் மக்களை பிரிப்போரை எதிர்ப்பதையும் கைவிடவில்லை. எந்த நிலையிலும் மக்களுக்கு நேர்மையாக பணிபுரிய வேண்டும் என்பதையும் கைவிடவில்லை. தொகுதி குறைந்ததால், கீழே விழுந்து விட்டதாக கருத முடியது. தொகுதிகளின் எண்ணிக்கை தேர்தலில் கூடலாம், குறையலாம்.

கூட்டணிக்குள் லேட்டஸ்ட்டாக வந்த தே.மு.தி.க.,வுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, உங்கள் கட்சிக்கு தி.மு.க., கொடுக்கவில்லையே. அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் வழக்கப்பட்டுள்ளதே?


விசுவாசமாக இருக்கிறோம் என்பதை விட, அரசியல் உணர்வுடன் இருக்கிறோம். தமிழக நலனுக்காக, உரிமைக்காக, ஜனநாயகத்திற்காக, 'இண்டி' கூட்டணி ஒற்றுமைக்காக, முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார். அவருடன் நாங்கள் துணை நிற்கிறோம். தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்' வழங்கியதையும், முக்கியத்துவம் தருவதையும், நாங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவை இல்லை. கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகள் வாங்கினோம். கூடுதலாக ஒரு தொகுதிதான் கேட்டோம். கிடைத்தது ஐந்து தொகுதிகள் என்றாலும், அதை கட்சி ஏற்றுக்கொண்டது. அந்த தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பதவி முக்கியமல்ல என்பர். ஆனால், ஐந்து தொகுதிகளுக்காக கூட்டணி சேராமல், தனித்து போட்டியிட்டிருந்தால், கட்சியாவது வளருமே?


தேர்தல் அரசியலில், தனித்து போட்டியிடுவதற்குரிய காலச்சூழல் எங்களுக்கு அமையவில்லை. எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணையும் போது, தனித்து போட்டியிடும் நிலை வரும் போது போட்டியிடுவோம்.

எதிர்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?


ஒருங்கிணைய வேண்டும் என்பது, ஏழெட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது. காலம் அந்த சூழலை உருவாக்கும் என, திடமாக நம்புகிறேன். இணைய வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன்.

கேரளாவில் கூட்டணி ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மறுக்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு, அதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?


கேரளா கூட்டணி ஆட்சி திட்டத்தை வகுத்துள்ளது. அதனால் அங்கு கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். அம்மாநிலத்தை போல், தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி திட்டம் வகுக்கும் போது, அதற்கான சூழல் உருவாகும் போது, கூட்டணி ஆட்சியில் இடம் பெறுவது குறித்து கட்சி முடிவு எடுக்கும்.

த.வெ.க., தலைவர் விஜய், ஓட்டுகளை பிரிப்பவர் என விமர்சித்தீர்கள். அவர் யார் ஓட்டை பிரிப்பார் என எதிர்பார்க்கிறீர்கள்?


தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை, விஜயால் பிரிக்க முடியாது. எதிர்க்கட்சி ஓட்டுகளை பிரிப்பார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் மாநில செயலராக இருப்பவர், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லையா?


மாநில செயலர் போட்டியிட வேண்டும் என விதி இல்லை. நான் போட்டியிடப் போவதில்லை. இது என் தனிப்பட்ட கருத்து. கட்சி பணிகளை கவனிக்க வேண்டும். போட்டியிட கட்சி வலியுறுத்தும் சூழல் உருவானாலும், கட்சி பணிகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன்.

கட்சியின் மாநில செயலரான பின், கட்சியை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?


கட்சியின் கிளை கமிட்டி, மாவட்ட குழுக்களில் உள்ள நிர்வாகிகளை, 'பூத் கமிட்டி' உறுப்பினர்களாக நியமித்துள்ளோம். கேரள மாநிலத்தில் இருப்பதை போல், ஆண்டுக்கு ஒருமுறை மக்களிடம் நேரடியாக நிதி வசூலிக்க உள்ளோம். இளம் பெண்கள், பல்கலை கல்லுாரி மாணவர்கள், கிராமப்புற, குடிசைப்பகுதி இளைஞர்களை, கட்சியில் சேர்ப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். பிஎச். டி., மாணவர்கள் கட்சியில் ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர். மக்களோடு மக்களாக பின்னிப் பிணைந்து, மக்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மகேந்திரன், கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்க என்ன தான் காரணம்?


யாரையும் ஓரங்கட்ட முடியாது. ஒதுக்கி வைக்கவும் முடியாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மூத்த தலைவர். யாரையும் கட்சி பழிவாங்காது. அடித்தட்டு மக்களுக்கும், மது ஒழிப்புக்குமாக போராடி வருகிறார். அரசியலில் ஏற்றம் இறக்கம் வரும்.

உண்டியல் குலுக்கி தேர்தல் நிதி வசூலித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது 'கார்ப்பரேட்' நிறுவனங்களிடம் நிதி வாங்குகின்றனவா?


இந்தியாவிலேயே தேர்தல் பத்திரம் வாங்காத கட்சிகள், இடதுசாரி கட்சிகள்தான். கார்ப்பரேட் நிறுவனத்திடம் நிதி வாங்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறோம். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., போன்ற கட்சிகளிடம், தேர்தல் செலவுக்கு நிதி பெற்று, செலவு செய்துள்ளோம்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., முதல் முறையாக 15 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக, எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தியது. அதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

அந்த பணத்திலிருந்து, நாங்கள் ஒரு பைசா கூட எடுக்கவில்லை. தேர்தல் செலவுக்காக அவர்களிடம் எடுத்து கொடுத்து விட்டோம். தி.மு.க., வும் கணக்கு காட்டுவதற்காக வங்கியில் பணம் செலுத்தியது. அதை எங்கள் கட்சிக்கு ஏற்பட்ட கறையாக கருதுகிறோம். அந்த கறையை போக்குவதற்காக, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் பணம் வாங்கவில்லை. நுாறாண்டுகள் கண்ட கட்சியின் மீது, ஊழல் குற்றச்சாட்டு கிடையாது.

தி.மு.க., ஆட்சியில், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், நீங்கள் வாயே திறக்கவில்லையே. இது தான் உங்கள் சமூக அறிவியல் முழக்கமா?


முதலில் வாய் திறந்து கண்டன முழக்கமிட்டதே நாங்கள் தான். ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது. தீண்டாமை கூடாது என, தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். யாரிடமும் சமரசம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சமூக விடுதலை, சமூக நீதி, சமூக ஒற்றுமையை பேணிக் காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மறைந்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மக்களிடம் பெரும் செல்வாக்கு இருந்தது. அது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவவில்லையே...


நல்லகண்ணு மறைந்தும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்தனர். மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நல்லகண்ணு கொள்கை வாழ்க, லட்சியம் வாழ்க என முழக்கமிட்டதே சாட்சி. அவரையும் கம்யூனிஸ்ட் கட்சி தான் வளர்த்தது. அவரது உழைப்பும் கட்சி வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டபோது, ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தது ஏன்?


வேடிக்கை பார்க்கவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில் போராடினோம். விவசாயிகள், தொழிலாளர்களுக்காக, அதிகமாக குரல் கொடுத்துள்ளோம். உழைக்கும் மக்கள், எளிய மக்களின் உரிமைக்காக ஓடோடி போராடுகிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 'லெட்டர் பேடு கட்சி' என, எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே...


அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் அப்படி பேசுவர். அனைத்து மாவட்டங்களிலும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை போல் ஓட்டு வங்கி, கட்சி நிர்வாகம் இருக்கிறது. தேசிய அளவில் 7.20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 1.30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து எம்.பி.,க்கள் உள்ளனர். கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறாம். தனித்து போட்டியிட்டு, எங்கள் கட்சியை சுய பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக இருந்த நீங்கள், தற்போது மாநில கட்சியாக சுருங்கி விட்டீர்கள்; இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பல மாநிலங்களில் எங்கள் கட்சி இயங்குகிறது. நுாற்றாண்டு கொண்டாடிய கட்சி. தேர்தல் கமிஷனும், எங்கள் கட்சி ஒரே சின்னத்தில் போட்டியிட அனுமதி தந்துள்ளது. எனவே, நாங்கள் தேசிய கட்சி அந்தஸ்துடன் தான் இருக்கிறோம். அதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொரு அரசியல் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், காலசக்கரத்தின் அடிப்படையில் அமையும்.

கம்யூனிஸ்ட் கட்சி துவக்கிய 1925ல் தான் ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும் துவக்கப்பட்டது. இன்று, அவர்கள் நாட்டை ஆள்கின்றனர். நீங்கள் கட்சி அங்கீகாரத்தை இழந்து நிற்கிறீர்கள். ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழும் நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?


கட்சி இழந்த அங்கீகாரத்தை மீட்டுவிடலாம். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையும், கம்யூனிஸ்ட் கட்சி கொள்கையும் வேறு வேறு. நாங்கள் கட்சியின் கொள்கை, சித்தாந்தத்தை எப்போதும் விட்டுக்கொடுக்கவில்லை. நான் ஒரு கம்யூனிஸ்ட்காரன் என்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம், இந்தியாவில் தோல்வி அடைந்து விட்டதா?


தோல்வி என்ற பேச்சுக்கு இடமில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறது. கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் சோஷலிசம் இடம் பெற்றிருப்பதே அதற்கு சாட்சி.

தமிழகத்தில் பா.ஜ., கூட கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்கள் நிலை தேய்மானமாக இருக்கிறதே?


எங்கள் கட்சி வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கும் பா.ஜ.,வுக்கும் தான் இறுதிப்போர் என, பா.ஜ., கட்சியே சொல்கிறது. அப்படி என்றால், நாங்கள் வளர்ந்துதானே இருக்கிறோம் என்பதை, பா.ஜ.,வே ஒப்புக் கொள்கிறது. மக்களிடம் உள்ள ஜனநாயக சக்தியின் துணை கொண்டு பா.ஜ.,வை வளரவிடாமல் வீழ்த்துவோம்.

Advertisement