ரூ.8,000 கூப்பன் வினியோகித்த திமுகவினர்: கடைகளில் வாக்குவாதம் செய்த பெண்கள்
சென்னை : தேர்தலுக்கு முன்பே, பல்வேறு பகுதிகளில் 8,000 ரூபாய் கூப்பன்களை திமுகவினர் வினியோகிப்பதால், அவற்றை வாங்கிய பெண்கள், கடைகளுக்கு சென்று பொருட்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், 'இல்லத்தரசி திட்டம்' என்ற பெயரில், குடும்ப தலைவிகளுக்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் எனவும் அதை பயன்படுத்தி, வாஷிங் மெஷின், பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருமலை சமுத்திரம் ஊராட்சியில், திமுகவினர், 8,000 ரூபாய்க்கான கூப்பனை, பெண்களிடம் கொடுத்துள்ளனர். இந்த படங்கள் வெளியானதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, தவெக சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு அடுத்த மாரண்டஹல்லி கிராமத்தில், 8,000 ரூபாய் கூப்பன்கள் கொடுக்கப்பட்டன. அதில், ரேஷன் அட்டை எண், குடும்பத் தலைவி பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இதனால், அதை உண்மையான கூப்பன் என நம்பிய பெண்கள், அருகில் உள்ள கடைகளில் சென்று கொடுத்தபோது, கடைக்காரர் வாங்க மறுக்கவே, அப்பெண்கள் வாக்குவாதம் செய்தனர். தேர்தல் முடிந்து, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து, அரசாணை வெளியிட்டால் தான், பொருட்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. இதனால், 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்து, தங்களை ஏமாற்றியதை உணர்ந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல, வடசென்னையின் பல பகுதிகளில், கூப்பன்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அங்கு சென்ற அதிமுகவினர், கூப்பன் வழங்கிய திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திமுகவினர் 8,000 ரூபாய் கூப்பன் வழங்குவது தொடர்பாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில், பெண் வாக்காளர்களை குறிவைத்து, 8,000 ரூபாய் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேரடியாகவே கூப்பன்களை வினியோகித்த படங்கள் வெளியாகி உள்ளன. எனவே, தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்