பட்டியலினத்தவருக்கு எதுவும் செய்யாத தி.மு.க.,: பா.ஜ., - எஸ்.சி., பிரிவு தேசிய தலைவர் புகார்
சென்னை: 'தி.மு.க., ஆட்சியில், பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய பல நுாறு கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது. பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, அந்த பிரிவு மக்களிடம் பா.ஜ.,வினர் தெரிவிக்க வேண்டும்,' என, பா.ஜ., - எஸ்.சி., பிரிவு தேசிய தலைவர் லால் சிங் ஆர்யா தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., - எஸ்.சி., பிரிவு நிர்வாகிகளுடன், அந்த பிரிவின் தேசிய தலைவரான ம.பி., மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் ஆர்யா, பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதகார் ரெட்டி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், லால் சிங் ஆர்யா பேசியதாவது:
நாட்டில் பட்டியலின மக்கள், பொருளாதார ரீதியாக முன்னேற, பல்வேறு நலத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
ஆனால் அந்த நிதியை, தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு, தி.மு.க., அரசு செலவழிக்காமல், அந்த மக்களுக்கு பயன்படுத்தாமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது.
இதனால், அந்த மக்களால் பயன் பெற முடியவில்லை. புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும், குடிநீர் மேல் நிலைத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தி.மு.க., நிர்வாகிகள், பட்டியல் சமூகத்தினர் மீது பல தாக்குதலை நடத்தி உள்ளனர்.
எனவே, இந்த சம்பவங்களை, தமிழகத்தில் எஸ்.சி., பிரிவு மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று, அவர்களிடம் விரிவாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு லால்சிங் ஆர்யா பேசினார் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்