தி.மு.க., தேர்தல் அறிக்கையை வாசித்து பிரசாரம் செய்த தே.மு.தி.க., பிரேமலதா
திருத்தணி: திருத்தணியில், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வாசித்து, தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலர் பிரேமலதா பிரசாரத்தை நேற்று துவங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியான தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து தே.மு.தி.க., கட்சியின் பொதுசெயலர் பிரேமலதா நேற்று மாலை, பிரசாரம் செய்வதற்கு திருத்தணிக்கு வந்தார்.
முதலில் பிரேமலதா, வேட்பாளருடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றார். அப்போது வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரேமலதாவிற்கு வெள்ளிவேல் வழங்கினார். அந்த வேலை, மூலவர், உற்சவர், சண்முகர் ஆகிய சன்னதிகளில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.
கமலா தியேட்டர் அருகே வேனில் நின்றவாறு பிரேமலதா பேசியதாவது:
இன்று திருத்தணியில் துவங்கிய தேர்தல் பிரசாரம், இம்மாதம், 21ம் தேதி மாலை, 5:00 மணிக்கு விருத்தாச்சலம் தொகுதியில் முடிக்கிறேன். தமிழகம் முழுதும் தேர்தல் பிரசாரம் செய்வேன்.
திருத்தணி தொகுதியில் ஏற்கனவே, கடந்த, 2011ம் ஆண்டு முரசு சின்னம் வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் திருத்தணி தொகுதியில் முரசு சின்னம் வெற்றி பெறும்.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் புத்தகத்தில் இருக்கும் அனைத்து வாக்குறுதிகள், வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றப்படும்.
முதல்படை வீடாக மாறிய
திருத்தணி முருகன் கோவில்
தமிழகத்தில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்குகிறது திருத்தணி முருகன் கோவில். ஆனால் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தின் போது, திருத்தணி முருகன் கோவில் எப்படி முதல்படை வீடாக உள்ளதோ, அதே போல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், முதன்மை தொகுதியாக திருத்தணி தொகுதியை மாற்றுவேன் என பேசினார்.
அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், திருத்தணி ஐந்தாம் படை வீடு என, சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்