தி.மு.க., ஆட்சி தொடரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. அது தொடரும் என்பது உறுதி' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
'மே' தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள 'மே' தினப் பூங்காவில் அமைந்துள்ள, 'மே' தின நினைவு சின்னத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது: தொழிலாளர்களின் உரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், 'மே' முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தி.மு.க., வினர் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலனை, வரும் 4-ம் தேதி பெற இருக்கிறோம். அதில் துளி அளவு கூட மாற்றமில்லை.
தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு, ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை, அனைவருக்கும் இருக்கிறது. 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம். அது தொடரும் என்பது உறுதி.
தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதும், கருணாநிதி எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக, நான் மட்டுமல்ல, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம். இவ்வாறு பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்