தி.மு.க.,வில் 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ.,; விஜய் அலையால் இளைஞர்களுக்கு அடிக்குது யோகம்
மதுரை: தமிழகத்தில் வீசும் விஜய் அலையால் தி.மு.க.,வில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் (மா.செ.,) நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சி அமைப்பு ரீதியாக தற்போது 72 மாவட்டங்களை தி.மு.க., கொண்டுள்ளது. சென்னையில் இரண்டு மா.செ.,க்களுக்கு தலா 5 சட்டசபை தொகுதிகள், மீதமுள்ள 3 மாவட்ட செயலாளர்களுக்கு தலா 2 தொகுதிகள் என 16 தொகுதிகளுக்கு 5 மா.செ.,க்கள் உள்ளனர். இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மா.செ.,க்கு 4 அல்லது 3 சட்டசபை தொகுதிகளும் அமைந்துள்ளன.
நேற்று நடந்த மா.செ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் மிக உருக்கமாக பேசியுள்ளார். சட்டசபை தேர்தலில் இளைஞர்களை சுருட்டிய த.வெ.க., அலையை கட்டுப்படுத்தும் வகையில் தி.மு.க.,வில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அதில் முக்கியமானதாக இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மா.செ., என்ற அடிப்படையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய மா.செ.,க்கள் பதவி இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில் தற்போதுள்ள மா.செ.,க்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. ஒரு மா.செ.,க்கு 2 தொகுதிகள் வீதம் மேலும் மா.செ., எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பதவியில் இளைஞர்களை நியமித்து கட்சிக்குள் இளைஞர்களின் ஆதரவை அதிகரிக்கவும், முதற்கட்டமாக சோஷியல் மீடியாக்களில் தி.மு.க.,வினரின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யவும் தலைமை முடிவு செய்துள்ளது. விஜய் வரவால் இளைஞர்களுக்கு பதவி வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்