'அழகர்சாமி யார் தெரியுமா?' : மாணிக்கம் தாகூர் சமாளிப்பு
விஜயபிரபாகரின் தாத்தாவுக்காக தான், தேர்தல் பணிகளை செய்து வருவதாக, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறி வருகிறார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க., போட்டியிட்டது. வேட்பாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகர் களமிறங்கினார். இதற்கு, விஜயகாந்தின் பூர்வீக கிராமம், குலதெய்வம் கோவில் விருதுநகர் தொகுதியில் உள்ளது, நாயுடு சமூக ஓட்டுகள் கணிசமாக உள்ளன என காரணங்கள் சொல்லப்பட்டன.
காங்., வேட்பாளராக மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவை எதிர்த்து விஜயபிரபாகர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடு செய்து மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளராக விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோருக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக திட்டி தீர்த்த தே.மு.தி.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதை, எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
கிண்டலை சமாளிக்க, புதிய பிரசாரத்தை மாணிக்கம் தாகூர் கையில் எடுத்துள்ளார். 'விஜயகாந்தின் தந்தை அழகர்சாமி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அந்த பெரியவருக்காக விஜயபிரபாகருக்கு பிரசாரம் செய்கிறோம்' என, மாணிக்கம் தாகூர் கூறி வருகிறார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அழகர்சாமி செய்த பணிகள் குறித்தும், அவர் அள்ளிவிட துவங்கியுள்ளார். இதை பார்த்து, தே.மு.தி.க.,வினரே வாயடைத்து நிற்கின்றனர். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பின், அதற்கு கைமாறாக, லோக்சபா தேர்தல் வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் 'டீலிங்' பேசி வருகிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்