காலை வாரும் கட்சியினர்; போராடும் அமைச்சர்கள்
மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வெற்றி பெற, அமைச்சர்களான நேருவும், மகேஷும் மாவட்டத்தில் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ., அப்துல் சமது போட்டியிடுகிறார். அமைச்சர் மகேஷ் மாவட்ட செயலராக உள்ள தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதி உள்ளது.
அப்துல் சமதுவின் பிரசாரத்தின்போது சில ஊர்களில், தொகுதிக்கு அவர் அதிகம் வரவில்லை என்ற குற்றச்சாட்டும், எதிர்ப்பும் எழுந்தது. தவிர, தி.மு.க.,வில் சீட் கிடைக்காத கட்சி நிர்வாகிகளும், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
அதிர்ச்சி அடைந்த அமைச்சர் நேரு, தனது ஆதரவாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் கொடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு அப்துல் சமதுவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிருப்தி நிர்வாகிகளை அழைத்த அமைச்சர் மகேஷ், 'ஒழுங்காக வேலை பார்த்து வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். இல்லாவிட்டால், தேர்தலுக்கு பின் பதவிக்கு சிக்கல் ஏற்படும்' என்று எச்சரித்து விட்டார். அப்படி இருந்தும், சில தி.மு.க., நிர்வாகிகள் இன்னும் களத்தில் தீவிரமாக இறங்கவில்லை. சில தி.மு.க., நிர்வாகிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதனால், கட்சியினர் காலை வாரிவிடுவரோ என்ற பயத்தில், அமைச்சர்கள் நேருவும் மகேஷும் மணப்பாறை தொகுதியில் இரு நாட்கள் தொடர் பிரசாரம் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற தி.மு.க., வேட்பாளர்களுக்கு கூட, இரு அமைச்சர்களும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அமைச்சர்களின் தீவிரம், ம.ம.க.,வினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்