ஸ்டாலினுடன் ராகுல் சேர்ந்து பிரசாரம் செய்யாததை பெரிதுபடுத்த வேண்டாம்: காங்., தலைவர் கார்கே வேண்டுகோள்
சென்னை: ''லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் முதல்வர் ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்யாததை பெரிதுபடுத்த வேண்டாம்'' என, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, எதிர்க்கட்சிகள் தோற்கடித்து விட்டன என, பிரதமர் மோடி கூறி வருகிறார். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என தெரிந்தும், மசோதாக்களை கொண்டு வந்தது ஏன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து, அவர்களுக்கு பயம்.
தொகுதி மறுவரையறை மசோதாவை, மகளிர் இட ஒதுக்கீடு என கூறி, மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர்.
வடக்கு, தெற்கு என, பா.ஜ., பிரித்து பார்க்கிறது. அண்ணாதுரை பெயரில் கட்சி வைத்துக் கொண்டு, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருக்கிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை ஆகியவற்றை வைத்து, எதிர்க்கட்சிகளை பா.ஜ., மிரட்டுகிறது. அதன் அடிப்படையில், 'மோடி ஒரு பயங்கரவாதி' என கூறினேன். தனிப்பட்ட முறையில் கூறவில்லை.
ராகுலின் பிரசார திட்டம் மற்றும் சூழ்நிலை காரணமாகவே, அவரும், முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தில் இணைந்து, பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அதை பெரிதாக்க வேண்டாம். காங்கிரஸ் தலைமை அனுமதியுடன், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசியதாக, பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். நான் தான் காங்கிரஸ் தலைவர். என்னை பிரவீன் சக்கரவர்த்தி பார்க்கவே இல்லை. பின்னர் எப்படி தலைமை அனுமதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்