Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'இல்லத்தரசி திட்ட கூப்பன்' வினியோகம்: தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு

 'இல்லத்தரசி திட்ட கூப்பன்' வினியோகம்: தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி, இல்லத்தரசி திட்டத்துக்கான, 8,000 ரூபாய் கூப்பன்களை வினியோகித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது' என, தேர்தல் கமிஷன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'இல்லத்தரசி திட்டத்தின் கீழ், 8,000 ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும்; அதில் விருப்பப்பட்ட, வீட்டு உபயோகப் பொருட்களை, மகளிர் வாங்கிக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் சிலரும், கட்சியினரும், 8,000 ரூபாய் மாதிரி கூப்பன்களை வாக்காளர்களுக்கு வினியோகித்து வருவதாகக் கூறி, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை செயலர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு, கும்பகோணம், அண்ணாநகர் உட்பட பல தொகுதிகளில், முதல்வர் புகைப்படம், வரிசை எண்ணுடன், 8,000 ரூபாய்க்கான கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, இந்த கூப்பன்களை வழங்க முடியும்.

ஆனால், ஆட்சிக்கு வரும் முன்பே, கூப்பன் வினியோகிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம்.

சில தொகுதிகளில், தி.மு.க., வேட்பாளர்களும், சில தொகுதிகளில் தி.மு.க.,வினரும், இந்த கூப்பன்களை வினியோகித்து வருவது குறித்து, தேர்தல் கமிஷனில் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த கூப்பன்களை பறிமுதல் செய்து, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில், 'கூப்பன் வினியோகம் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

'இது தொடர்பாக விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement