சேகர்பாபுவிடம் விலை போகாதீர்: கட்சியினருக்கு பழனிசாமி 'டோஸ்'
சென்னையில், பெரம்பூர், திரு.வி.க., நகர், கொளத்துார், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை எனவும், அவர்கள் சேகர்பாபுவிடம் மறைமுகமாக தொடர்பு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படுவதாகவும், பழனிசாமியிடம் அக்கட்சி வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சமீபத்தில், வட சென்னை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், பகுதி, வட்ட செயலர்கள் என, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தன் வீட்டிற்கு அழைத்து, பழனிசாமி கண்டித்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
நிர்வாகிகளின் உள்ளடி வேலையால், அ.தி.மு.க., வெற்றி பாதிக்கும் என, துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ, பழனிசாமியிடம் புகார் தெரிவித்தார். சேகர்பாபு மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது, தேர்தல் கமிஷனில் ராயபுரம் மனோ வழங்கிய புகார் மனுவையும், பழனிசாமியிடம் ஆதாரமாக கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்யுமாறு, தனது கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சேகர்பாபுவிடம் சில நிர்வாகிகள் விலை போய் விட்டனர். அந்த நிர்வாகிகள் பெயர் பட்டியல் பழனிசாமியிடம் இருக்கிறது. அவர்களை எல்லாம் அழைத்து, பழனிசாமி 'டோஸ்' விட்டார்.
'அ.தி.மு.க., கூட்டணி 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என, மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. வட சென்னையில் அ.தி.மு.க., தோல்வி அடையுமானால், நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும். தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்' என, அவர்களை பழனிசாமி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்