தேர்தல் 12டி மூத்த வாக்காளர் தபால் ஓட்டளிக்க வீடு தேடி 12டி படிவம் வினியோகம்
திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் வசிக்கும், மாற்றுத்திறனாளி மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என, 3,979 வாக்காளருக்கு தபால் ஓட்டு பெறுவதற்கான படிவம் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்தபடியே, தபால் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக, மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், தபால் ஓட்டு கோரும், 'படிவம் - 12டி' பூர்த்தி செய்து பெறப்படுகிறது.
மாவட்ட அளவில், 11 ஆயிரத்து, 499 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 14 ஆயிரத்து, 963 மூத்த வாக்காளருக்கு, தபால் ஓட்டு வழங்கப்பட உள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில், 85 வயதுக்கு அதிகமான, 1,641 மூத்த வாக்காளர்கள்; மாற்றுத்திறனாளி வாக்காளர், 2,338 பேர் என, 3,979 வாக்காளர் தபால் ஓட்டு பெறும் வாக்காளர் என கண்டறியப்பட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி, மாவட்ட அளவில் அதிக வாக்காளர்களை கொண்ட இரண்டாவது தொகுதி. திருப்பூர் மாநகராட்சியின், 29 வார்டு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 10 ஊராட்சிகள் அடங்கியுள்ளன. அவிநாசி ரோடு, குமார் நகர் - கொங்கு மெயின் ரோடு துவங்கி, ஈரோடு மாவட்ட எல்லையான, பட்டம்பாளையம் வரை நீண்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு வாயிலாக, வீடுகளை கண்டறிந்து, அவர்களிடம், 'படிவம் - 12டி' வழங்கி, பூர்த்தி செய்து பெறும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை என்பதால், வீடு தேடிச்சென்று, 'படிவம் - 12டி' வழங்கும் பணி நடந்தது. வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆர்.டி.ஓ., சிவப்பிரகாஷ், தாசில்தார்களுடன் சென்று, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளருக்கு, தபால் ஓட்டு பெறுவதற்கான படிவத்தை வழங்கினர்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில்,' தபால் ஓட்டு கோரும் , '12டி' படிவத்தை விரைவில் பூர்த்தி செய்த கொடுக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் தயாரானதும், ஓட்டுப்பதிவு நாளுக்கு முன்னதாகவே, தேர்தல் அறிவிக்கும் நாட்களில், வீடு தேடி வந்து, தபால் ஓட்டு வழங்கி, ஓட்டளித்ததும் பெற்றுச்சென்று, 'ஸ்ட்ராங் ரூம்'மில் வைத்துவிடுவோம்,' என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்