தேர்தல் ஒட்டுப்பதிவு இயந்திரம் குறித்து மண்டல அலுவலருக்கு பயிற்சி
திருப்பூர்: மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதியில், 99 ஓட்டுச்சாவடி மையங்களில், 442 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. ஒட்டுப்பதிவு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக, 38 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் இறுதி பட்டியல் தயாரானதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்தப்படும்.
அத்துடன், ஒட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் 20க்கும் அதிகமான பொருட்கள், தனித்தனி பண்டல்களாக தயார்செய்யப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர், இவற்றை மண்டல அலுவலர்கள் வாயிலாக ஓட்டுச்சாவடிகளில் கொண்டு சேர்ப்பார்.
அதாவது, தயார் நிலையில் உள்ள ஓட்டுச்சாவடி இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை, ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு சேர்ப்பதும், ஓட்டுப்பதிவு நாளில், அவற்றை திரும்பப்பெற்று, ஓட்டு எண்ணிக்கை மைய பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பதும், மண்டல தேர்தல் அலுவலர்களின் பணி.
இந்நிலையில், மண்டல தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்; ஓட்டுச்சாவடிகளில் ஒப்படைக்கும் போது சரிபார்க்க வேண்டியவை; ஓட்டுப்பதிவு முடிந்து திரும்ப பெறப்படும் போது,'சீல்' வைத்துள்ளதை சரிபார்த்து பின்பற்ற வேண்டிய சரிபார்ப்பு ஆகியவை குறித்து, திருப்பூர் வடக்கு தொகுதி மண்டல அலுவலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவபிரகாஷ் முன்னிலையில், தேர்தல் பிரிவை சேர்ந்த அலுவலர்கள், மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு, மின்னணுஓட்டுப்பதிவு இயந்திரத்தை கொண்டு விளக்கம் அளித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்