தற்போதும் தி.மு.க., கூட்டணியில் தான் வி.சி.க., தொடர்கிறது: திருமாவளவன்
சென்னை: ''தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அ.தி.மு.க., அணி ஆதரவு அளித்துள்ளதால், எங்கள் ஆதரவு நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது, மீண்டும் தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். இதில், ரகசியம் எதுவும் இல்லை; எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது.
நாங்கள் தற்போதும் தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்; அவர்கள் எப்போது அழைத்தாலும் ஆலோசனை நடத்துவோம். வி.சி.க., யாருடனும் பேரம் பேசவில்லை.
தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி தொடர்பாக, என்னிடம் யாரும் நேரடியாக பேசவில்லை. என்னை முதல்வராக்க, தி.மு.க., - அ.தி.மு.க., அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை.
இரண்டு எம்.எல்.ஏ.,க்களை வைத்துக்கொண்டு, யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. த.வெ.க., அரசை வெளியில் இருந்து ஆதரித்துள்ளோம். பா.ஜ., ஆதரவு கட்சி என்று, த.வெ.க.,வை நான் விமர்சித்துள்ளேன்.
அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தை சமூகநீதி மண், ஈ.வெ.ராமசாமி மண் என்று சொன்னாலும் கூட, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவது எளிதல்ல.
அ.தி.மு.க., ஊழல் கட்சி என, முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார். அக்கட்சி, பா.ஜ., கூட்டணியில் தீவிரமான நட்புடன் இருக்கிறது.
அ.தி.மு.க.,வில் இருந்து சிலர், த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிப்பதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனினும், த.வெ.க., அரசுக்கு எங்கள் ஆதரவு நிலைப்பாடு குறித்து, வி.சி.க., உயர்நிலை குழுவில் நிச்சயம் ஆலோசிப்போம். இவ்வாறு பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்