தேர்தல் தோல்விக்கான காரணம்: தி.மு.க.,வில் விசாரணை தொடக்கம்
- நமது நிருபர் -
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக, தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வு குழுவினர், தாங்கள் தயாரித்து வைத்துள்ள 14 கேள்விகளுடன் விசாரணையை தொடங்கினர்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., சந்தித்த தோல்விக்கான காரணங்களை அறிய, 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்த, 36 பேர் கொண்ட குழுவை கட்சித் தலைவர் ஸ்டாலின் நியமித்தார்.
இக்குழுவினர் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் நேரில் சென்று, நேற்று ஆய்வு பணிகளை தொடங்கினர். இவர்கள், தி.மு.க., தொண்டர்களின் உண்மையான கருத்துகளையும், தோல்விக்கான காரணங்களையும் சேகரித்து திரட்டி வருகின்றனர்.
தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் காணப்பட்ட குறைபாடு, உட்கட்சி பிரச்னை, மக்கள் என்ன நினைக்கின்றனர், ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுடன் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவினர் விசாரணை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் என யாரும் உடன் இருக்கக்கூடாது என, கட்சி தலைமை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
ஒரு தொகுதிக்கு செல்லும் இரண்டு பேரும் இணைந்தே, அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஆய்வு முடிந்த பின், தொகுதியின் அறிக்கையை அன்றைய தினமே நிறைவு செய்து, கள ஆய்வு குழுவில் உள்ள இருவரும் தனித்தனியாக தர உள்ளனர்.
கள ஆய்வில் சேகரித்த விபரங்கள் அனைத்தையும், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் அறிக்கையாக தயாரிக்கும் ஆய்வு குழுவினர், அதை தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க உள்ளனர்.
கள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கட்சியில் தீவிர மறுசீரமைப்பு மற்றும் அதிரடி மாற்றங்களை எடுக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்